நாய்க்கு மரண தண்டனை விதித்த பெண் கைது!

Rakshana MA
நாய் ஒன்றை தூக்கிலிட்டு கொலை செய்த சம்பவம் தொடர்பில் வடமாகாணம் - மாங்குளத்தை சேர்ந்த 48 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அண்மையில், ஒட்டுசுட்டானில் உள்ள இணக்கச்சபை ஒன்றில் விசித்திரமான தீர்ப்பு வழங்கப்பட்டதாகவும் அதில் நாய் ஒன்று தூக்கிலிடப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும் சமூக ஊடகங்களில் பதிவு ஒன்று அதிகம் பகிரப்பட்டு வந்தது.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மாங்குளத்தை சேர்ந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
இணக்கச்சபை
ஒட்டுசுட்டான் மத்தியஸ்த சபையில், பெண் ஒருவர் தனது ஆட்டினை நாய் ஒன்று கடித்து விட்டதாக கூறி, முறைப்பாடு செய்துள்ளார்.
இதன்போது, இணக்கசபையில் இருந்த மூன்று நீதவான்கள், குறித்த நாயை தூக்கிலிட்டு கொலை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளனர்.
அத்துடன், நாயை தூக்கிலிட்டு கொலை செய்த பின்னர் அதனை புகைப்படம் எடுத்தும் தமக்கு அனுப்பி வைக்குமாறு குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், அந்த பெண் அந்நாயின் கழுத்தை மரமொன்றில், கயிற்றினால் கட்டி, கொலை செய்துள்ளதுடன் அதனை புகைப்படம் எடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து, இவ்விடயம் தொடர்பில் பொதுமக்கள் கவனத்திற்கு வந்துள்ள நிலையில் சமூக வலைதளங்களிலும் பகிர்ந்துள்ளனர்.
மனிதாபிமானமற்ற வகையில், ஐந்தறிவுடைய உயிரினம் ஒன்றுக்கு இவ்வாறான ஒரு தண்டனை வழங்கப்பட்டுள்ளமை கண்டிக்கப்பட வேண்டிய விடயம் எனவும் மக்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
அதேவேளை, இந்த சம்பவத்துன் தொடர்புடையவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்குமாறும் பொதுமக்கள் கோரி வந்தனர்.
மனிதாபிமானமற்ற செயல்
இதனை தொடர்ந்து, மாங்குளம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது 48 வயதுடைய பெண் ஒருவர் இன்று(27) கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் 1907ஆம் ஆண்டு 13ஆம் இலக்க விலங்குகளுக்கு வன்கொடுமை செய்வதைத் தடுக்கும் கட்டளைச் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படுவார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக பொதுமக்கள் மத்தியில் இவ்வாறான மனிதாபிமானமற்ற செயல்கள் அதிகரித்து வருகின்றன. இது சமூக சீர்குலைவுகளை எடுத்துக் காட்டும் வகையில், உள்ளது.
பொதுவாகவே, விலங்குகள், ஒரு நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றி வருகின்றன. அதிலும், அவற்றை பராமரிப்பதன் மூலமே உலகில் உயிர் பல்வகைமை மற்றும் சமநிலையை பேண முடியும்.
அத்துடன், மனிதாபிமான முறையில், அவற்றிற்கு ஏற்படும் தீங்குகள் தொடர்பில் மனிதர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சட்டத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள ஒன்றாகும்.
எனவே, இது போன்ற செயல்களை தவிர்க்கும் வகையில், பொதுமக்கள் விழிப்புடனும், அவதானத்துடனும் இருப்பது மிக அவசியமானதொன்றாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |