கொழும்பில் நுட்பமான முறையில் மோதிரம் திருடிய பெண் கைது
கொழும்பு-ஹோமாகம நகரில் உள்ள நகைக்கடையொன்றில் நுட்பமான முறையில் மோதிரம் ஒன்றை திருடி சென்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்றையதினம் (22.05.2023) பதிவாகியுள்ளது.
நகைக்கடைக்கு வந்த பெண்ணொருவர் இரண்டரை லட்சம் ரூபா பெறுமதியான தங்கமோதிரம் ஒன்றை கொள்வனவு செய்யவுள்ளதாக தெரிவித்து மோதிரங்களை பரீட்சித்துள்ளார்.
இதன்போது தன் கையில் இருந்த தங்க முலாம் பூசப்பட்ட இரும்பு மோதிரத்தை சூட்சமமாக கழற்றி அதற்கு பதிலாக தங்க மேதிரத்தை மாற்றியுள்ளார்.
பின்னர் வேறு ஒரு மோதிரத்தை கொள்வனவு செய்யப்போவதாக தெரிவித்து 500 ரூபா முன்பணம் செலுத்திவிட்டு, மிகுதியை வங்கியில் இருந்து எடுத்துவருவதாக தெரிவித்துப் புறப்பட்டுள்ளார்.
நடத்தையில் சந்தேகம்
எனினும் செலுத்திய பணத்திற்கு பற்றுச்சீட்டு பெற்றுக்கொள்ளாமல் சென்றதால் அவரது நடத்தையில் சந்தேகம் கொண்ட நகைக்கடை உரிமையாளர், மோதிரங்களைப் பரீட்சித்துப் பார்த்தபோது ஒரு மோதிரம் மோசடியான முறையில் திருடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய சீ.சீ.டி.வி காட்சிகளின் அடிப்படையில் மோசடிப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இதற்கு முன்பும் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை குறித்த பெண்ணை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.