முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச்செல்வதே எமது இலக்கு: ரிஷாட்
கட்சியிலிருந்து எவர் வெளியேறினாலும் திறமையானவர்களை அடையாளப்படுத்தி கட்சியை வளர்ச்சிப்பாதைக்கு இட்டுச்செல்வதே எமது இலக்காக இருக்கும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய மக்கள் கூட்டணியில், திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் வைத்தியர் ஹில்மி மஹ்ரூபை ஆதரித்து, நேற்று (15) கிண்ணியாவில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது; “ஜனாதிபதி தேர்தலில், ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்கு நாங்கள் தீர்மானித்தோம். அந்தத் தேர்தலில் சுமார் 95,000 வாக்குகளை சஜித்துக்குப் பெற்றுக்கொடுத்தோம்.
கட்சியின் வளர்ச்சி
ஆனால், எமது தீர்மானத்துக்கு உடன்பட முடியாது எனக் கூறிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப், அமைதியாக இருக்கப்போவதாகத் தெரிவித்தார்.
பின்னர், ரணிலின் தந்திரத்துக்குப் பலியாகி எமது கட்சியிலிருந்து தூரமாகிவிட்டார். அப்துல்லாஹ் மஹ்ரூப் கட்சியின் வளர்ச்சிக்காக கடந்த காலங்களில் செய்த பணிகளுக்கு நன்றி கூறுகிறோம்.
2010 மற்றும் 2015 தேர்தல்களில், அவரை வேட்பாளராக நிறுத்தி வெல்ல வைத்ததும் எமது கட்சியே. இதற்காக இம்மாவட்டத்தைச் சேர்ந்த பலர் உழைத்தனர். இப்போது அப்துல்லாஹ் மஹ்ரூப் எங்களுடன் இல்லை. எவர் வெளியேறினாலும் பரவாயில்லை. திறமையானவர்களை களத்துக்கு கொண்டுவந்து, கட்சியை வளர்ச்சிப்பாதைக்கு இட்டுச்செல்வதே எமது இலக்காக இருக்கும்.
நாடாளுமன்றத் தேர்தல்
அந்தவகையில், வைத்தியர் ஹில்மி மஹ்ரூபை நாடாளுமன்றத் தேர்தலில் நிறுத்தியுள்ளோம். நகர சபை தவிசாளராக இருந்த இவரிடம் நிறைய அனுபவங்கள் உள்ளன.
சிறந்த கல்விமானாகவும் ஒழுக்கசீலராகவும் இவரை நாம் பார்க்கிறோம்.இறைவன் நாடினால் அவரது வெற்றி உறுதியாகும். புல்மோட்டை முதல் தோப்பூர் வரை அவருக்கு ஆதரவு இருக்கிறது.
இந்த மாவட்டத்தின் பிரச்சினைகளை முதன்மைப்படுத்தி உழைப்பதற்கு, வைத்தியர் ஹில்மி மஹ்ரூபை வெற்றியடையச் செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |