காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டிற்கு அண்மையாக காணப்படுகின்ற குறைந்த அழுத்த பிரதேசம் நாளை, 25 ஆம் திகதியளவில் ஒரு தாழமுக்கமாக வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இன்றைய தினத்திற்கான வானிலை தொடர்பான முன்னறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக அதிகரித்து வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.