மக்கள் பேரனர்த்தம் ஒன்றுக்கு தம்மை தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Climate Change Eastern Province Northern Province of Sri Lanka
By Fathima Nov 25, 2025 06:02 AM GMT
Fathima

Fathima

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் மக்கள் அனைவரும் பேரனர்த்தம் ஒன்றுக்கு தம்மை முழுமையாக தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும் என யாழ்.பல்கலைக்கழக புவியியல்துறைத் தலைவர் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தென் மேற்கிலும் தென்கிழக்கிலும் காணப்படும் காற்றுச் சுழற்சிகள் முறையே கிழக்கு மற்றும் மேற்கு நோக்கி நகர்ந்து நாளையதினம் (26.11.2025) ஒன்றாக இணைந்து காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுப்பெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

பேரனர்த்தம் 

நாளை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளில் கனமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

மக்கள் பேரனர்த்தம் ஒன்றுக்கு தம்மை தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Weather Emergency Alert

அதேவேளை எதிர்வரும் 26.11.2025 முதல் 29.11.2025 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்ளுக்கும், மேற்கு, தெற்கு, மத்திய, சபரகமுவா, ஊவா, வடமத்திய மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

எதிர்வரும் 26.11.2025 முதல் கிழக்கு தெற்கு, மேற்கு, மத்திய, சபரகமுவா மற்றும் ஊவா மாகாணங்களில் காற்று மணிக்கு 50-70 கி.மீ. வேகத்தில் வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகவே இலங்கையின் காலநிலை சார் அனர்த்தமொன்றுடன் தொடர்புடைய அனைத்து திணைக்களங்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இன்று 25.11.2025 முதல் 30.11.2025 வரை மிகப் பெரும் மழை, அதிவேக காற்று வீசுகை, வெள்ளப்பெருக்கு தொடர்பில் உடனடி முன்னாயத்த நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும்.

தாழ்நிலப் பகுதிகள், ஆற்றங்கரைகள் மற்றும் குளங்களின் வான் பாயும் பகுதிகளில் உள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

அச்சு, இலத்திரனியல் மற்றும் சமூக ஊடகங்கள் இப்பேரனர்த்தத்துக்கான வாய்ப்பு பற்றியும், அதன் சாத்தியமான பாதிப்புக்கள் பற்றியும், அவற்றிலிருந்து எம்மைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் அனைத்து மக்களுக்கும் தகவல்களைப் பரிமாற்ற வேண்டும்.

இதற்காக உரிய திணைக்களங்களிடமிருந்து தகவல்களைப் பெற்றுக்கொள்ளுதல் அவசியம்.

ஆனால் ஊடகங்கள் வழங்கும் தகவல்கள் மக்களைப் பதட்டத்துக்குள்ளாக்காமல் தயார்ப்படுத்துவதற்கேற்ற வகையில் அமைதல் முக்கியமானது. 

கனமழை

காலநிலை சார் அனர்த்தங்கள் முன்கூட்டியே எதிர்வு கூறத்தக்கன. நாம் அந்த எதிர்வு கூறல்களையும் உரிய திணைக்களங்களின் அறிவுறுத்தல்களையும் பின்பற்றினால் எமக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் எம்மைப் பாதுகாக்கலாம். 

நாட்டின் அனைத்து கடற்றொழிலாளர்களும் இன்று முதல் (25.11.2025) எதிர்வரும் 30.11.2025 வரை எக்காரணம் கொண்டும் கடலுக்கு செல்ல வேண்டாம். 

மக்கள் பேரனர்த்தம் ஒன்றுக்கு தம்மை தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Weather Emergency Alert

வடக்கு, மற்றும் கிழக்கு மாகாணங்களின் விவசாயிகள் எதிர்வரும் 30.11.2025 வரை உரமிடல் மற்றும் கிருமி, களை நாசினி தெளித்தல் போன்ற எந்த விவசாய நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம். 

நாட்டில் அபாயகரமான வீதிகள் என அடையாளப்படுத்தப்பட்ட வீதிகளைப் பயன்படுத்த வேண்டாம். எதிர்வரும் 27, 28. 11.2025 கிழக்கு மாகாணத்திற்கு மிக மிக கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. 

எதிர்வரும் 28, 29ஆம் திகதிகளில் மிக மிக கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. 

எனவே மேற்குறிப்பிட்ட இரண்டு மாகாணங்களினதும், அவற்றில் உள்ளடங்கும் மாவட்டங்களினதும் நிர்வாகங்கள் இது தொடர்பில் போதுமான தயார்ப்படுத்தல்களை மேற்கொள்வது சிறந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.