மின் கட்டணத்துடன் நீர் கட்டணமும் திருத்தப்படும்: ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு
புதிய மின் கட்டணத் திருத்தத்திற்கு இணைந்த வகையில், நீர்க் கட்டணத்தைக் குறைப்பது குறித்தும் ஆராயப்பட்டு வருவதாகவும், இந்த வாரத்துக்குள் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் (Jeevan Thondaman) தெரிவித்துள்ளார்.
அதிபர் ஊடக மையத்தில் (President's Media Division) இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ஜீவன் தொண்டமான், “மின் கட்டணத்தைக் குறைக்க நடவடிக்கை எடுத்தமைக்காக அமைச்சர் கஞ்சன விஜேசேகரவை (Kanchana Wijesekera) பாராட்டுகின்றோம். நீர் விநியோகம் என்பது மின் கட்டணத்தைச் சார்ந்து இருக்கும் துறையாகும்.
டொலரின் பெறுமதி
எனவே, நீர் கட்டணத்தை குறைக்க இந்த மின் கட்டண திருத்தம் உதவும் என நம்பப்படுகிறது. நீர் வழங்கல் பல்வேறு காரணிகளைப் பொறுத்து அமைகின்றது. மின் கட்டணம் குறைக்கப்பட்டால், நீர்க் கட்டணமும் குறைக்கப்படும் என, நாம் ஏற்கனவே உறுதியளித்தோம்.
தற்போது, வட்டி விகிதங்கள் 26% இல் இருந்து 11% ஆக குறைந்துள்ளன. அதனை கருத்தில் கொண்டு டொலரின் பெறுமதியின் அடிப்படையில் நீர்க் கட்டணத்தை குறைப்பது குறித்து ஆராயப்படுகிறது.
காணி உரிமை
மேலும், மலையக மக்களுக்கு வீட்டு உரிமையே முதலில் வழங்கப்பட வேண்டும் என்று ஒரு சிலர் குறிப்பிடுகின்றனர். ஆனால், வீட்டு உரிமை என்பது வேறு. காணி உரிமை என்பது வேறு.
காணி உரிமை வழங்கப்பட்டால் வீடுகளை நிர்மாணிக்கக் கூடிய வசதி உள்ளவர்கள் அவர்களுக்கான வீடுகளை நிர்மாணிக்கும் உரிமை கிடைக்கும். ஏற்கனவே வீடுகள் இருந்தும் காணி உறுதிப்பத்திரங்கள் இல்லாதவர்களுக்கும் இந்த வேலைத்திட்டத்தின் மூலம் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்க எதிர்பார்த்துள்ளோம்.
எனவே சரியான தீர்மானங்கள் ஊடாக நாட்டைக் கட்டியெழுப்பியவருக்கே எதிர்கால அதிபர் தேர்தலில் ஆதரவு வழங்கவேண்டும் என்பதே எனது தனிப்பிட்ட நிலைப்பாடாகும்” என அமைச்சர் தெரவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |