அரசியல் இலாபம் காண துடிக்கும் சாணக்கியன்: வியாழேந்திரன் விடுத்துள்ள சவால்
நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தன் மீது அபாண்டமாக குற்றம் சுமத்தி அதனூடாக அரசியல் செய்து தன் மீது கறை பூச துடிக்கின்றார் என வர்த்தகம் மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமது பிரத்தியேக செயலாளர் மற்றும் உதவியாளர் இலஞ்ச ஊழல் அதிகாரிகளினால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மட்டக்களப்பில் வைத்து கைது செய்யப்பட்டமை தொடர்பில் தனியார் ஊடகங்களுக்கு தமது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சாணக்கியன் கருத்து தெரிவித்துள்ளதாக வியாழேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், சம்பவ தினமான அன்று தான் அங்கு இருந்ததாகவும் இலஞ்ச ஊழல் அதிகாரிகள் வருகைத்தந்திருந்த வேலை அங்கிருந்து தாம் முச்சக்கர வண்டி ஒன்றில் தப்பி சென்றதாகவும், பகிரங்கமாக பொய் குற்றச்சாட்டினை சுமத்தி வதந்திகளை பரப்பி இதனை வைத்து அரசியல் இலாபம் காண துடித்து வருகின்றதாகவும் இராஜாங்க அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.
பகிரங்க சவால்
அவ்வாறு தாம் எவரிடமும் இலஞ்சம் வாங்கவில்லை எனவும் இலஞ்ச ஊழல் ஆணைக் குழு அதிகாரிகள் ஆதரவாளரை கைது செய்த இடத்தில் தான் இருக்கவில்லை எனவும், தனது மெய்ப்பாதுகாவலர் மூலம் அதனை தன்னால் நிரூபிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புபடுத்தி திரிபு படுத்திய கருத்துக்களை வெளியிட்ட சாணக்கியன், அந்த சம்பவத்தின் போது தான் இருந்ததை நிரூபித்து காட்டினால் தான் அரசியலில் இருந்து முற்றாக விடை பெறுவதாகவும் அவ்வாறு நிரூபிக்காவிட்டால் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அரசியலில் இருந்து விடை பெறுவாரா? என பகிரங்க சவால் விடுவதாக இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.
சட்ட நடவடிக்கை
இதேவேளை, தாம் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல அபிவிருத்தி திட்டங்களை செய்து வருவதினை பொறுக்க முடியாமல் பொய்களை மாத்திரம் கூறி அரசியல் செய்து வரும் சாணக்கியன், தன்னை பற்றி அவதூறு கூறுவதற்கு எந்த வகையிலும் தகுதி இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பல தடவைகள் சாணக்கியன் தன்னுடன் நேரடியாகவும் சரி மறைமுகமாகவும் சரி பல சவால்களை விட்டு இருக்கின்றார் என்றும், பொய்யாக வதந்திகளை பரப்பி அதில் அரசியல் இலாபம் காண துடிக்கும் சாணக்கியனுக்கு எதிராக தான் மான நஷ்ட ஈடு வழக்கு ஒன்றை பதிவு செய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |