வித்யா படுகொலை: விரைவில் அறிவிக்கப்படவிருக்கும் தீர்ப்பு
மாணவி சிவலோகநாதன் வித்தியா கடத்தப்பட்டு தகாத நடத்தைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு மீதான விசாரணைகள் இன்று(06.11.2025) நிறைவடைந்தது.
அதன்படி குறித்த மனு மீதான தீர்ப்பு விரைவில் அறிவிக்கப்படும் என உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் இன்று அறிவித்துள்ளது.
பிரதம நீதியரசர் ப்ரீதி பத்மன் சூரசேன தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் குறித்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
வித்தியா கொலை
வித்தியா கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட சுவிஸ் குமார் உள்ளிட்ட குற்றவாளிகளால் குறித்த மேன்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
அந்நிலையில், கடந்த 2015ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் மாணவி சிவலோகநாதன் வித்தியா, கடத்தப்பட்டு தகாத நடத்தைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் பாரிய அதிர்வலைகளைத் தோற்றுவித்தது.

இதனைத் தொடர்ந்து சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன், வழக்கும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டது.
அந்நிலையில், இறுதியாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உள்ளிட்ட மூவரடங்கிய நீதிபதிகளால் பிரதிவாதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |