வெசாக் வாரம் - ஹஜ் பெருநாள் உழ்ஹிய்யா கடமை - சபையில் முன்வைக்கப்ட்ட கோரிக்கை
இலங்கையில் வாழும் பௌத்த மற்றும் இஸ்லாமிய சமூகங்களுக்கு ஒரே காலப்பகுதியில் அமைந்துள்ள புனிதமான இரண்டு சமய நிகழ்வுகளை அமைதியாகவும், பரஸ்பர கௌரவத்துடனும் முன்னெடுப்பதற்கான சூழலை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனத் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில், "இவ்வருடம் மே மாதம் 27ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 02ஆம் திகதி வரை அரசாங்கத்தினால் 'அரச வெசாக் வாரம்' பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, மே மாதம் 28ஆம் திகதி முஸ்லிம்களின் புனித ஹஜ் பெருநாள் ஆரம்பமாவதுடன், அதனைத் தொடர்ந்து வரும் நாட்களில் முஸ்லிம்கள் தமது மார்க்கக் கடமையான உழ்ஹிய்யா (பலியிடல்) கிரியைகளை நிறைவேற்ற வேண்டியுள்ளது.
நாட்காட்டி மாற்றங்கள் காரணமாக ஏற்பட்டுள்ள இந்தத் தற்செயலான நிலைமை, முஸ்லிம் சமூகத்தினர் மத்தியில் தமது மார்க்கக் கடமைகளை நிறைவேற்றுவதில் ஏதேனும் தடைகள் ஏற்படுமோ என்ற அச்சத்தைத் தோற்றுவித்துள்ளது.
குறிப்பாக, கடந்த காலங்களில் இவ்வாறான தருணங்களில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் மீண்டும் ஏற்படாதிருப்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்” என கோரியுள்ளார்.