யாழில் இளைஞர்களால் சுற்றி வளைக்கப்பட்ட வாகனம்: பொலிஸாரின் விசாரணை தீவிரம்!
யாழ்ப்பாணம் - புதுக்குடியிருப்பு பகுதியில் மாடுகளை கடத்திச் சென்றதாக சந்தேகித்து புதுக்குடியிருப்பு இளைஞர்களால் வாகனமொன்று சுற்றிவளைக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த சுற்றிவளைப்பானது நேற்று(15) இரவு புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
அண்மைக்காலமாக புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வளர்ப்பு மாடுகள் திருட்டுப்போகும் சம்பவங்கள் அதிகளவில் பதிவாகி வருகின்றன.
திருட்டுப்போகும் வளர்ப்பு மாடுகள்
இருப்பினும் புதுக்குடியிருப்பு பகுதிகளில் அதிகளவான வளர்ப்பு மாடுகள் திருட்டு போயிருந்த நிலையில் குறித்த கால்நடை வளர்ப்பு உரிமையாளர்களினால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாடுகள் கொடுக்கப்பட்டும் இது தொடர்புடையவர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் கடந்த மாதம் புதுக்குடியிருப்பு - கோம்பாவில் பகுதியில் வீட்டு காணி ஒன்றில் இருந்த சிறிய பட்டியில் இருந்த மாடுகள் திருட்டு போயிருந்தன.
சுற்றிவளைக்கப்ட்ட வாகனம்
இதற்கிடையில் சந்தேகத்திற்கிடமாக வாகனமொன்று நடமாடுவதை அவதானித்த குறித்த கிராம மக்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் முயற்சி செய்து பிடிக்க முடியாமல் போன காரணத்தினால் இலக்கத்தகடினை கண்காணித்து வைத்துள்ளனர்.
இந்த நிலையில், நேற்று(15) குறித்த வாகனம் பிரதேசத்திற்குள் நடமாடுவதை அவதானித்த பிரதேச இளைஞர்களால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸாரினால் குறித்த வாகனம் மற்றும் சாரதியை அழைத்துச் சென்றுள்ளனர்.
குறித்த வாகனத்தை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |