இலங்கை எம்பிக்களுக்கான வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்
தற்போதைய அரசாங்கம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை வழங்காது என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய (5) செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தேசியமக்கள் சக்தி அரசாங்கம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகன அனுமதி பத்திரங்களை வழங்குவதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொருளாதார நிலைமை
அத்தோடு, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தங்கள் கடமைகளைச் செய்ய ஒரு வாகனத்தை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், 5 ஆண்டு பதவிக்காலம் முடிந்ததும், வாகனத்தை திருப்பித் தர வேண்டும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
மேலும், ஆடம்பரம் இல்லாத வாகனத்தை வழங்குவதற்காக குழுவை உருவாக்க இப்போது நேரமில்லை என்றும் நாட்டின் பொருளாதார நிலைமையைக் கருத்தில் கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை இறக்குமதி செய்யும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்க வாகனம்
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உதவுவதற்கான திட்டங்கள் இருந்தாலும், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களைப் போலவே அவர்களும் தங்கள் சொந்த ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், பல்வேறு காரணங்களுக்காக அரசாங்கத்தால் தற்போது பொது அரசாங்க வாகனங்களை பராமரிக்க முடியவில்லை என்றும் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |