வட்டுக்கோட்டை இளைஞன் கொலை வழக்கு: அடையாள அணிவகுப்பு தொடர்பில் தகவல்

Sri Lanka Police Jaffna Crime
By Fathima Dec 04, 2023 02:45 PM GMT
Fathima

Fathima

வட்டுக்கோட்டை இளைஞன் கொலை வழக்கில் பிரதான சாட்சி வருகை தராத நிலையில் அடையாள அணிவகுப்பு எதிர்வரும் 8ம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளதுடன் நாளைய தினம் (05) தொடர் விசாரணை நடைபெறும் என யாழ்ப்பாண நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இன்று (04.12.2023) நடைபெற்றுள்ளது.

இதன்போது கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நான்கு பொலிஸாரும் அனுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

மேலதிக விசாரணை

இன்றைய தினம் வழக்கானது மேலதிக விசாரணைக்கு நியமிக்கப்பட்ட போதிலும் மன்று ஏற்கனவே எடுத்த தீர்மானத்திற்கு அமைய அடையாள அணிவகுப்பை நடாத்த தீர்மானித்தது.

வட்டுக்கோட்டை இளைஞன் கொலை வழக்கு: அடையாள அணிவகுப்பு தொடர்பில் தகவல் | Vattukkottai Youth Murder Case In Jaffna

இருப்பினும் உயிரிழந்தவருடன் இருந்த பிரதான சாட்சி மன்றுக்கு சமூகமளிக்காத நிலையில் அடையாள அணிவகுப்பு எதிர்வரும் வெள்ளிக்கிழமை (08) காலை 9.30 மணிக்கு நடத்த மன்று உத்தரவிட்டது.

மேலும் தொடர் மரண விசாரணை நாளைய தினம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தபடுபவர்கள் அனைவரும் பொலிஸ் உத்தியோகத்தர்களாக இருக்க வேண்டும் எனவும் தோற்றத்திற்கமைய இருக்க வேண்டும் என வலியுறுத்தியபோது மன்று அதனை ஏற்றுக் கொண்டது.

சித்திரவதைக்கு உள்ளான நிலை

பிரதான சந்தேக நபர்கள் சார்பில் அரவிந்த ஹப்பந்தல மற்றும் சர்மினி விக்னேஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர். உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினர் சார்பில் அன்ரன் புனிதநாயகம் உள்ளிட்ட 30ற்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் பிரசன்னமாகியிருந்தனர்.

வட்டுக்கோட்டை இளைஞன் கொலை வழக்கு: அடையாள அணிவகுப்பு தொடர்பில் தகவல் | Vattukkottai Youth Murder Case In Jaffna

வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்தங்கேணி பகுதியை சேர்ந்த நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் கைது செய்யப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளான நிலையில் கடந்த நவம்பர் 19ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

இளைஞன் உயிரிழந்தது , யாழ்.நீதவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் என்பதனால் , கொலை தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்று வருகிறது.