பெறுமதி சேர் வரி 24 வீதமாக உயரும் சாத்தியம்: பேராசிரியர் ஆனந்த ஜயவிக்ரம
இலங்கையில் பெறுமதி சேர் வரியானது 24 வீதம் வரையில் உயர்வடையும் சாத்தியங்கள் காணப்படுவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் விஞ்ஞான மற்றும் புள்ளிவிபரவியல் பேராசிரியர் ஆனந்த ஜயவிக்ரம தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஜனவரி மாதம் முதல் பெறுமதி சேர் வரியானது 18 வீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், எதிர்வரும் ஆண்டு நடுப்பகுதி அளவில் பெறுமதி சேர் வரி 21 முதல் 24% வரையில் உயர்த்தப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
வரி அதிகரிப்பு
இந்த வரி அதிகரிப்பு குறித்த சாத்தியப்பாடுகள் தொடர்பில் இம்முறை வரவு செலவுத் திட்ட யோசனையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பெறுமதி சேர் வரியின் மூலம் 1400 பில்லியன் ரூபாவினை வருமானமாக திரட்டுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
18 % வரி அதிகரிப்பு ஊடாக இலக்கினை அடைய முடியாத நிலை காணப்படுவதாகவும் இதனால் பெறுமதி சேர் வரி 24% வரையில் உயர்த்தப்படக்கூடிய சாத்தியம் உண்டு எனவும் பேராசிரியர் ஆனந்த ஜயவிக்ரம தெரிவித்துள்ளார்.