தமிழ் டயஸ்போராக்கள் குறித்த அமெரிக்காவின் எதிர்பார்ப்பு: விசா மறுப்புக்கான காரணத்தை போட்டுடைக்கும் சரத் வீரசேகர
அமெரிக்க தூதரகத்தால் தனக்கு விசா வழங்க மறுக்கப்பட்டுள்ளதன் மூலம் தமிழ் டயஸ்போராக்களின் வாக்குகளையே அவர்கள் எதிர்பார்ப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குற்றம்சாட்டியுள்ளார்.
அத்துடன் இது அமெரிக்காவின் ஓரவஞ்சனை செயற்பாடு எனவும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார்.
தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் சரத் வீரசேகர அமெரிக்காவின் வாஷிங்டனில் அடுத்த மாத இறுதியில் நடைபெறவுள்ள மாநாட்டில் கலந்து கொள்வதற்காக விசாவிற்கு விண்ணப்பித்திருந்த நிலையில், அவருக்கு விசா வழங்குவதை அமெரிக்கா தவிர்த்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
விசா வழங்க மறுப்பதற்கான காரணம்
மேலும் தெரிவிக்கையில், நாம் நாட்டைப்பற்றியும், நாட்டின் சுயாதீனத்தன்மை பற்றியும் பேசுகின்றமையால் அமெரிக்கா எமக்கெதிராக இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டு எமக்கு விசா மறுக்கப்பட்டிருக்கலாம்.
நான் இதற்கு முன்னர் அமெரிக்காவில் பயிற்சிகளைப் பெற்றிருக்கின்றேன். அவ்வாறிருந்தும் தற்போது எனக்கு விசா வழங்க மறுத்துள்ளனர். தமிழ் டயஸ்போராக்களின் வாக்குகளையே இவர்கள் இதன் மூலம் எதிர்பார்க்கின்றனர்.
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்துக்கு முழுமையான ஆதரவு வழங்கியதன் காரணமாகவே அமெரிக்கா இவ்வாறு எமக்கெதிராக செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. இவை தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும். விசா வழங்குவதென்பது அமெரிக்காவின் உரிமையாகும்.
ஓரவஞ்சனையாக செயற்படும் அமெரிக்கா
எனவே இவ்விடயத்தில் எம்மால் அழுத்தம் பிரயோகிக்க முடியாது. எவ்வாறிருப்பினும் ஒரே நாட்டுக்குள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாக பார்க்க முடியாது. ஆனால் இது போன்ற விடயங்களில் அமெரிக்கா ஓரவஞ்சனையாகவே செயற்படுகிறது.
அதே போன்று யாரை அனுப்ப வேண்டும் என்றும் அவர்களால் கூற முடியாது. அது எமது உரிமையாகும். இவர்கள் மறைமுகமாக அரசாங்கத்தின் சுயாதீனத்தன்மையை மீது தாக்குதலை மேற்கொள்கின்றனர்.
இவ்வாறான சந்தர்ப்பங்களின் போது அரசாங்கம் துணிச்சலுடன் செயற்பட வேண்டும். தனிப்பட்ட விவகாரங்களில் உங்களால் தலையிட முடியாது என்று அரசாங்கம், அமெரிக்காவுக்கு நேரடியாகக் கூற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
[CGOOHLA ]
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |