பாகிஸ்தான் அணியை வெற்றிகொண்ட அமெரிக்கா
உலகக்கிண்ண 20க்கு 20 போட்டித் தொடரில் பாகிஸ்தான் அணியை அமெரிக்க அணி வீழ்த்தி அபார வெற்றியை பெற்றுள்ளது.
டெக்சாஸ், டலாஸ் க்ராண்ட் ப்ரெய்ரீ விளையாட்டரங்கில் நேற்று இடம்பெற்ற ஏ குழுவுக்கான போட்டியில் சுப்பர் ஓவரில் பாகிஸ்தானை வீழ்த்திய ஐக்கிய அமெரிக்கா வெற்றியை தனதாக்கியது.
இதற்கு முந்தைய போட்டியில் கனடாவை வீழ்த்திய அமெரிக்கா அணி 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகளைப் பெற்று ஏ குழுவில் முதலிடத்தை வகிக்கிறது.
நேற்றைய போட்டியில் பாகிஸ்தானினால் நிர்ணயிக்கப்பட்ட 159 ஓட்டங்களை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அமெரிக்கா 159 ஓட்டங்களைப் பெற ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது.
இதனை அடுத்து வெற்றி அணியைத் தீர்மானிக்க வழங்கப்பட்ட சுப்பர் ஓவரில் ஐக்கிய அமெரிக்கா 5 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
மொஹமத் ஆமிர் வீசிய சுப்பர் ஓவரில் ஐக்கிய அமெரிக்கா ஒரு விக்கெட்டை இழந்து 18 ஓட்டங்களைப் பெற்றது. இதில் 3 வைட்களில் 7 ஓட்டங்கள் கிடைத்தது.
பதிலுக்கு நேத்ரவால்கர் வீசிய சுப்பர் ஓவரில் பாகிஸ்தான் ஒரு விக்கெட்டை இழந்து 13 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய முன்னாள் ரி20 உலக சம்பியன் பாகிஸ்தான் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 159 ஓட்டங்களைப் பெற்றது.
இந்தப் போட்டியின் ஆரம்பத்தில் பாகிஸ்தான் பெரும் சிரமத்தை எதிர்கொண்டது. இதன் காரணமாக 5 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்களுக்கு 27 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தடுமாறிய பாகிஸ்தான் பவர் ப்ளே முடிவில் 3 விக்கெட்களை இழந்து 30 மாத்திரமே பெற்றிருந்தது.
இந்நிலையில் பாபர் அஸாம், ஷதாப் கான் ஜோடி பாகிஸ்தான் அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்த வழிவகுத்தனர். 4ஆவது விக்கட்டுக்காக இணைந்த இவர்கள் 72 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக்கொடுத்தனர்.
அமெரிக்க சார்பில் பந்துவீச்சில் நோஸ்துஷ் கெஞ்சிகே 30 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் சவ்ரப் நேத்ரவால்கர் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
160 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அமெரிக்கா 20 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 159 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை சமப்படுத்தியது.
பாகிஸ்தானின் பந்துவீச்சில் மொஹமத் ஆமிர், நசீம் ஷா, ஹரிஸ் ரவூப் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.