ஈரானிய கப்பல்களை கைப்பற்றும் அமெரிக்கா.. பதிலடி கொடுக்க ஈரானுக்கு உரிமை உண்டு!
ஐக்கிய நாடுகள் சபைக்கான ஈரானிய தூதர், ஈரான் நாட்டு கப்பல்களை அமெரிக்கா கைப்பற்றுவதற்கு எதிராக, உரிய முறையில் பதிலடி கொடுப்பதற்கான அனைத்து உரிமைகளும் ஈரானுக்கு இருப்பதாக வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவால் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈரான் நாட்டு சரக்குக் கப்பலில் இருந்த ஆறு மாலுமிகள் விடுவிக்கப்பட்டு தாயகம் திரும்பியுள்ளனர்.
ஓமான் வளைகுடா பகுதியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 'தூஸ்கா' (Touska) என்ற கப்பலில் இருந்தவர்களே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளதாக ஈரானின் தஸ்நிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனினும், அதே கப்பலில் இன்னும் 22 ஈரான் மாலுமிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை விடுவிப்பதற்கான முயற்சிகளில் ஈரான் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
சர்வதேச சபை..
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், கடந்த ஏப்ரல் 20ஆம் திகதி முற்றுகை விதிகளை மீறியதாகக் கூறி அமெரிக்க கடற்படை இந்த கப்பலைக் கைப்பற்றியது.
Iran's ambassador to the United Nations underlines that the Islamic Republic reserves all rights to duly confront the United States' seizure of Iranian vessels as part of Washington's continued illegal blockade.https://t.co/b5uzrteFOp
— Mehr News Agency (@MehrnewsCom) April 29, 2026
பெப்ரவரி 28 முதல் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீது தாக்குதல்களைத் தொடங்கியதைத் தொடர்ந்து, பதிலடியாக ஈரான் ஹார்முஸ் நீரிணையை மூடியதுடன் அமெரிக்க நட்பு நாடுகள் மீது தாக்குதல்களை முன்னெடுத்தது.
இதனால் அப்பிராந்தியத்தில் போர் சூழல் தீவிரமடைந்தது. பாகிஸ்தானின் சமரச முயற்சியால் ஏப்ரல் 8-ம் தேதி போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டு, இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
எனினும், அதில் இறுதி உடன்பாடு எட்டப்படவில்லை. பாகிஸ்தானின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த தற்காலிகப் போர்நிறுத்தம் நீடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ஏப்ரல் 13 முதல் ஈரான் மீது அமெரிக்கா கடற்படை முற்றுகையைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.