யுத்த காலத்திலும் இல்லாத தடைகள் கறுமலையூற்றில் ஏன்.. ஜனாதிபதிக்கு இம்ரான் மகரூப் எம்.பி. அவசர கடிதம்

Trincomalee Anura Kumara Dissanayaka Sri Lankan Peoples
By Sajithra May 07, 2026 02:03 AM GMT

திருகோணமலை, கறுமலையூற்று கடற்கரைப் பகுதிக்கு கடற்றொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் செல்வதற்கு விமானப்படையினரால் விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயகவுக்கு இம்ரான் மகரூப் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். 

இந்த தடையானது மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தையும் சுதந்திரத்தையும் பறிக்கும் செயலாகும் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான இம்ரான் மகரூப் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்கடிதத்தில், "திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவின் கீழ் உள்ள வெள்ளைமணல் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட கறுமலையூற்று கடற்கரைக்கு, நேற்று காலை முதல் பொதுமக்கள் மற்றும் கடற்றொழிலாளர்கள் செல்வதற்கு விமானப்படையினரால் திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடையின் காரணமாக குறித்த கடற்பரப்பை நம்பி வாழ்ந்து வரும் நூற்றுக்கணக்கான கடற்றொழில் குடும்பங்கள் தமது அன்றாடத் தொழிலை முன்னெடுக்க முடியாமல் நிர்கதியாகியுள்ளனர்.

முப்பது வருடகால கொடூர யுத்தம் நிலவிய காலப்பகுதியில் கூட இப்பகுதி கடற்றொழிலாளர்களுக்கு இவ்வாறானதொரு கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை.

தற்போதைய ஜனாதிபதி, மக்களுக்கான ஒரு புதிய அரசியல் கலாசாரத்தையும், சுதந்திரமான சூழலையும் கட்டியெழுப்ப முயற்சிக்கும் இவ்வேளையில், பாதுகாப்புத் தரப்பினரின் இத்தகைய தன்னிச்சையான நடவடிக்கைகள் அரசாங்கத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாகவே அமைகின்றன” என அவர் குறிப்பிட்டுள்ளார்.