புத்தளம் வைத்தியசாலையை பொது வைத்தியசாலையாக தரமுயர்த்த தீர்மானம்!

By Fathima Nov 21, 2025 07:23 AM GMT
Fathima

Fathima

புத்தளம் ஆதார வைத்தியசாலையை மாவட்டப் பொது வைத்தியசாலையாக தரமுயர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இன்று (21) நாடாளுமன்றத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

வைத்தியசாலை இல்லாத ஒரே மாவட்டம்

இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர், "எமது நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் எடுத்துக்கொண்டால், பிரதான நகரில் மாவட்டப் பொது வைத்தியசாலை இல்லாத ஒரே மாவட்டம் புத்தளம் ஆகும்.

புத்தளம் வைத்தியசாலையை பொது வைத்தியசாலையாக தரமுயர்த்த தீர்மானம்! | Upgrade Puttalam Hospital To A General Hospital

அத்துடன், புத்தளம் மாவட்டத்தின் சனத்தொகை பரம்பல், வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் வருகை போன்ற அனைத்துக் காரணிகளையும் கருத்திற்கொள்ளும்போது, அதனை மாவட்டப் பொது வைத்தியசாலையாகத் தரமுயர்த்துவதற்கான நேர்மறையான காரணிகள் காணப்படுகின்றன.

எமது நாட்டில் வைத்தியசாலைகள் விஞ்ஞானரீதியான அடிப்படையில் மாத்திரம் தரமுயர்த்தப்படவில்லை. நாம் ஒரு ஆதார வைத்தியசாலையை 'B', 'A' அல்லது மாவட்டப் பொது வைத்தியசாலையாகத் தரமுயர்த்த வேண்டுமானால், அதற்குத் தேவையான விசேட வைத்திய சேவைகளை எங்களால் வழங்க முடியுமா? முடியாதா? அதற்குரிய வசதிகள் எங்களிடம் உள்ளனவா? அதன் தேவை என்ன? என்பதைப் பார்க்க வேண்டும்.

நாட்டின் தேசிய திட்டத்திற்கமையவே செயற்பாடுகள் இடம்பெற வேண்டும். எப்படியிருப்பினும், இந்த 82 ஆதார வைத்தியசாலைகளுக்குத் தேவையான வசதிகள் படிப்படியாக வழங்கப்படும்.

ஆனால், இதற்குப் பிறகு வைத்தியசாலைகளைத் தரமுயர்த்தும்போது, கடுமையாகக் கவனத்தில் கொள்வோம். ஒன்று சனத்தொகை பரம்பல், இரண்டு புவியியல் ரீதியான தேவை, மூன்று எமது தேசியத் திட்டத்துடன் எவ்வளவு இணங்கிப் போகிறது என்பதாகும்." என்றார்.