பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் அரச பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள்
விரிவுரையாளர்களின் கொடுப்பனவை மாத்திரம் அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அரச பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் இன்று காலை ஒரு நாள் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
கல்வி கொடுப்பனவு
பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு வழங்கப்படும் கல்வி கொடுப்பனவை 25 வீதத்தால் அதிகரிக்கக் கோரிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தீர்மானத்திற்கு இந்த மாத முற்பகுதியில் அமைச்சர்கள் அமைச்சரவை இணக்கம் வெளியிட்டது.
இதன்படி இந்த கொடுப்பனவு அவர்களின் ஜனவரி மாத சம்பளத்தில் சேர்க்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.
எவ்வாறாயினும், விரிவுரையாளர்களின் சம்பளத்தை மாத்திரம் அதிகரிப்பது கல்விசாரா ஊழியர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாக முறைப்பாடு செய்துள்ள பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக்குழு இந்த அமைச்சரவை தீர்மானத்தை ஆட்சேபித்துள்ளது.
உருவாக்கப்பட்டுள்ள பிரச்சினை
பல்கலைக்கழகத் துறையின் சம்பளத்தை அதிகரித்தால்,பொதுவாக அனைவருக்கும் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை உயர்த்தவேண்டும்.
எனவே இந்த விடயத்தில் அரசாங்கமே இந்தப் பிரச்சினையை உருவாக்கியுள்ளது என்று பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக் குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான தொழிற்சங்க சம்மேளனத்தின் இணைச் செயலாளர் கே.எல்.டி.ஜி.ரிச்மண்ட் இன்றைய அடையாள பணிப்புறக்கணிப்பில் 23 தொழிற்சங்கங்கள் இணைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |