காஸா தொடர்பான ட்ரம்ப்பின் திட்டத்தை ஐ.நா பாதுகாப்புச் சபை அங்கீகரித்தது!
காஸாவில் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பினால் முன்வைக்கப்பட்ட திட்டம், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன்படி குறித்த திட்டத்திற்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் 13 உறுப்பு நாடுகள் அங்கீகாரம் வழங்கியுள்ளன. சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் குறித்த திட்டம் மீதான வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.
திட்டம்
இதேவேளை, சர்வதேச உறுதிப்படுத்தல் படையை ஸ்தாபித்து, பலஸ்தீன அரசை உருவாக்கும் பாதையை நோக்கிய காஸாவுக்கான திட்டமாக, ட்ரம்ப் குறித்த திட்டத்தை முன்மொழிந்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில் தமது திட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டமை தொடர்பில் ட்ரம்ப் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த திட்டம் தொடர்பான புதிய அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன போராளிகள் குழுவான ஹமாஸும், காஸாவிற்கான ட்ரம்ப்பின் 20 அம்சத் திட்டத்தின் முதல் கட்டத்திற்கு, கடந்த மாதம் தமது இணக்கத்தைத் தெரிவித்திருந்தன.
தீர்மானம்
எனினும், தற்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் அந்த இரண்டு தரப்புகளும் தமது ஆட்சேபனைகளை வெளியிட்டுள்ளன.

ட்ரம்ப்பின் இந்த புதிய திட்டம் இஸ்ரேலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறித்த திட்டத்தில் பலஸ்தீனத்தைத் தனி அரசாக அங்கீகரிப்பது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளமையே அதற்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் காஸா தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஹமாஸும் நிராகரித்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த திட்டத்தின் ஊடாக சர்வதேச பொறிமுறையை காஸாவிற்குள் அமெரிக்கா திணிப்பதாக ஹமாஸ் குற்றம் சுமத்தியுள்ளது.