ஐ.நா. மனித உரிமை அறிக்கையில் இனி மலையகமும் இடம்பெறும்: இலங்கைக்கான பிரதிநிதி உறுதி (Photos)
இலங்கை ஐ.நா. நிகழ்ச்சி வலயத்தில் மலையகத் தமிழர்களின் பிரச்சினைகள், தேசிய நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என ஐ.நாவின் இலங்கை பிரதிநிதி உறுதியளித்தார் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்தார்.
இலங்கைக்கான ஐ.நா. பிரதிநிதி மார்க் - அந்தரே, சமாதான சாளர ஒருங்கிணைப்பாளர்
தாரக ஹெட்டியாராச்சி ஆகியோரை தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ
கணேசன் எம்.பி. சந்தித்தார்.
இந்தச் சந்திப்பு தொடர்பில் கருத்துரைக்கும் போதே மனோ எம்.பி. மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஐ.நா. மனித உரிமைகள் பேரவை
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் இவ்வருட அறிக்கையில் மலையகம் பற்றி குறிப்பிடாமையை ஒரு குறைபாடாக ஐ.நாவின் இலங்கை பிரதிநிதி மார்க் - அந்தரே ஏற்றுக்கொண்டார். இது எதிர்காலத்தில் நிவர்த்தி செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
இலங்கையில், தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்க அலுவலகம், காணாமல்போனோர் அலுவலகம், உத்தேச உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஆகியவை இன்னமும் இழுபறியில் இருக்கின்றன.
இரு தரப்பிலும் குற்றங்கள் நிகழ்ந்தன என்பதை ஏற்றுக்கொள்ள இலங்கை அரசு பிடிவாதமாக மறுக்கின்றமையே இதற்குப் பிரதான காரணம் என நான், முன்னாள் சமீபத்து தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் என்ற முறையில் சொன்னதை ஐ.நாவின் இலங்கை பிரதிநிதி மார்க்-அந்தரே அங்கீகரித்து ஏற்றுக்கொண்டார்.
பெருந்தோட்ட தொழிலாளர்கள்
15 இலட்சம் மலையகத் தமிழர் மத்தியில் சுமார் ஏழரை இலட்சம் பேர் இன்னும் பெருந்தோட்டங்களில் வாழ்கின்றனர். அவர்களில் ஒன்றரை இலட்சம் பேர் தோட்டத் தொழிலாளர்கள்.
இந்தப் பெருந்தோட்டங்களில் வாழ்கின்ற மக்களே இலங்கை சமூக பொருளாதார வளர்ச்சியில் மிகவும் பின் தங்கியவர்கள் என்ற தரவுகளுடனான ஆவணத்தை எழுத்து மூலமாக ஐ.நாவின் இலங்கை பிரதிநிதி மார்க் - அந்தரேக்கு நாம் வழங்கினோம்.
இலங்கை ஐ.நா. நிகழ்ச்சி வலயத்தில் மலையகத் தமிழர்களின் பிரச்சினைகள், தேசிய நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் ஐ.நாவின் இலங்கை பிரதிநிதி உறுதியளித்தார் என தெரிவித்தார்.
அவருடன் வேலுகுமார் எம்.பி. மற்றும் கட்சியின் கேகாலை மாவட்ட அமைப்பாளர் பரணீதரன் ஆகியோரும் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.