உயர்தரப் பரீட்சையை பிற்போட கோரிக்கை விடுத்துள்ள உதய கம்மன்பில
எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறவிருக்கும் உயர்தர பொதுப் பரீட்சையினை ஒரு மாத காலத்திற்கு பிற்போடுமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கோரிக்கை முன்வைத்துள்ளார்.
கொழும்பில் உள்ள சர்வஜன சக்தி கட்சியின் அலுவலகத்தில் நேற்று( 11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கல்வி பொதுத்தராதர உயர்தர பாடத்திட்டங்கள் இன்னும் நிறைவடையவில்லை என்ற காரணத்தினால் உயர்தர பரீட்சையை ஒருமாத காலத்திற்கு பிற்போடுமாறு மாணவர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு மதிப்பளிக்கும் வகையிலே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பரீட்சை பிற்போட கோரிக்கைக்கான காரணங்கள்
தொடர்ந்தும் தெரிவிக்கையில், மக்கள் விடுதலை முன்னணியினர் 1987 ஆம் ஆண்டு காலப்பகுதியில் முதலாவது தாய் நாடு, இரண்டாவது கல்வி என்ற கொள்கையை முன்னிலைப்படுத்தி செயற்பட்டார்கள்.
ஜே.வி.பியின் வலியுறுத்தலினால் நானும் அவர்களின் அரசியல் செயற்பாடுகளில் பகுதியளவில் இணைந்துகொண்டேன். இருப்பினும் கல்வி நடவடிக்கைகளில் விசேட அவதானம் செலுத்தி தேர்ச்சி பெற்றுள்ளேன்.
கோவிட் பெருந்தொற்று மற்றும் பொருளாதார தாக்கம் ஆகிய காரணிகளால் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டு தேசிய பரீட்சைகளை நடத்தும் காலம் பிற்போனதுடன், ஆசிரியர்களின் தொழிற்சங்க போராட்டங்களினாலும் பாடத்திட்டங்களை நிறைவு செய்வதில் தாமதம் நிலவியுள்ளது.
எனவே, மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் பரீட்சையாக உயர்தர பரீட்சை கருதப்படுகின்றமையால் மாணவர்களின் நியாயமான கோரிக்கையை கருத்திற் கொண்டு உயர்தர பரீட்சையை ஒருமாத காலத்துக்கு அரசாங்கம் பிற்போட வேண்டும் என உதய கம்மன்பில கருத்து வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |