இரண்டு மாணவர்கள் உயிரிழப்பு

Batticaloa Sri Lanka
By Nafeel May 07, 2023 08:56 AM GMT
Nafeel

Nafeel

மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சவுக்கடி கடற்கரை பகுதியில் கடலில் குளிக்கச் சென்ற, இம்முறை சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

நேற்று -06- மாலை வீட்டிலிருந்து வகுப்புக்கு செல்வதாக கூறிச்சென்ற மாணவர்களே இவ்வாறு கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் 16 வயதுடைய கறுப்பங்கேணி விபுலானந்தா வித்தியாலயத்தில் இம்முறை சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்கள் என கொக்குவில் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்கள் கறுப்பங்கேணியை சேர்ந்த டானியல் றோகித் (16வயது), இருதயபுரத்தினை சேர்ந்த நிரோசன் பிரவீன் (16வயது) ஆகியோர் என உறவினர்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று மாலை இவர்கள் வீட்டிலிருந்து சென்று குறித்த கடற்பகுதியில் குளித்துக்கொண்டிருக்கும் போது அலையில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மரண விசாரணையை தொடர்ந்து சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைகளுக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது. குறித்த இளைஞர்கள் மரணமான சம்பவம் மட்டக்களப்பில் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.


-கிருஷ்ணகுமார்-