மட்டக்களப்பில் இரு தச்சுத் தொழிலாளர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு (Photos)
மட்டக்களப்பில் மின்சாரம் தாக்கி இரண்டு தச்சுத் தொழிலாளர்கள் உயிரிழந்ததுடன், ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் பிரிவிலுள்ள அமிர்தகழி பிரதேசத்தில் இன்று (14.06.2023) முற்பகல் 11 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீடு ஒன்றின் மேல்மாடிக் கூரையைத் திருத்தும் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தச்சுத் தொழிலாளர்கள் மீது மின்சாரம் தாக்கியதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
சம்பவத்தில் இருதயபுரத்தைச் சேர்ந்த 36 வயதுடைய ரொக்கி சைய்டே மற்றும் கருவப்பங்கேணியைச் சேர்ந்த 25 வயதுடைய ஞானப்பிரகாசம் கோடீசன் ஆகியோரே உயிரிழந்துள்ளனர் .
படுகாயமடைந்த 25 வயதுடைய இளைஞர் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில்
சேர்க்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.