அமெரிக்க பங்குச் சந்தையில் தாக்கம் செலுத்திய ட்ரம்பின் சர்ச்சைக்குரிய கருத்து!
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தில், கிரீன்லாந்து தொடர்பில் உரையாற்றிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமன்றி, தமது உரையின் போது ட்ரம்ப் நான்கு முறை 'கிரீன்லாந்து' என்பதற்கு பதிலாக 'ஐஸ்லாந்து' என்று குறிப்பிட்டது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பங்குச் சந்தை
இதனால் "ஐஸ்லாந்தினால் அமெரிக்கப் பங்குச் சந்தை நேற்று சரிவைச் சந்தித்தது" என தெரிவிக்கப்பட்டது.
எனினும், ட்ரம்ப்பின் கிரீன்லாந்து தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்துக்களாலேயே பங்குச் சந்தை சரிவடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
உலக பொருளாதார மன்றக் கூட்டத்தில், கிரீன்லாந்து விவகாரத்தில், டொனால்ட் ட்ரம்ப் வரலாற்றை திரித்துக் கூறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இதன்போது, கிரீன்லாந்தை வாங்குவதில் தாம் உறுதியாக இருப்பதாக மீண்டும் வலியுறுத்திய ட்ரம்ப், இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்காவே கிரீன்லாந்தைப் பாதுகாத்ததாக தெரிவித்தார்.
சர்ச்சைக்குரிய கருத்து
"நாங்கள் கிரீன்லாந்தை ஒரு பொறுப்பாளராக வைத்திருந்தோம், ஆனால் சிறிது காலத்திற்கு முன்பு அதை மரியாதையுடன் டென்மார்க்கிற்குத் திருப்பிக் கொடுத்தோம்" என்று அவர் கூறினார்.

இருப்பினும், ட்ரம்ப்பின் இந்த கூற்று தவறானது என வரலாற்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இரண்டாம் உலகப் போரின் போது டென்மார்க்கை ஜெர்மனி கைப்பற்றியதால், கிரீன்லாந்தின் பாதுகாப்பை அமெரிக்கா பொறுப்பேற்றது உண்மையே. ஆனால், அமெரிக்கா ஒருபோதும் கிரீன்லாந்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கவில்லை.
எனவே, இல்லாத ஒரு நாட்டைத் திருப்பிக் கொடுத்ததாக ட்ரம்ப் கூறுவது தவறான வரலாற்று தகவலாகும் எனவும் தெரிவித்துள்ளனர்.