திரியாய் படுகொலை நினைவு நாள் அனுஷ்டிப்பு
திருகோணமலை - திரியாய் பகுதியில் அப்பாவி பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டு 39ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு விசேட பூசை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வானது நேற்று (09) திரியாய் வரத விக்னேஸ்வரர் ஆலயத்தில் இடம்பெற்றுள்ளது.
அத்துடன் படுகொலை செய்யப்பட்ட மக்களின் ஆத்ம சாந்தி வேண்டி பிரார்த்தனை நிகழ்வுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொது மக்கள் படுகொலை
கடந்த 1985 ஆம் ஆண்டு இனவழிப்பு வன்முறை உச்ச கட்டம் அடைந்திருந்த நிலையில் ஆடி மாதம் 5ஆம் திகதி திரியாய் கிராமத்திற்குள் புகுந்தவர்கள் திரியாய் கிராமத்தில் உள்ள வீடுகள் அனைத்தையும் தீக்கிரையாக்கியதுடன் சொத்துக்களையும் தீக்கிரையாக்கி அழித்தார்கள்.
இதனை தொடர்ந்து, அதே வருடம் ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி திரியாய் அகதி முகாமில் தஞ்சமடைந்திருந்த அப்பாவி பொதுமக்கள் 12 பேரை மக்களின் போக்குவரத்திற்காக ஈடுபட்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தில் ஏற்றிச் சென்று கஜுவத்த என்னும் இடத்தில் வைத்து அவர்கள் அணிந்திருந்த மேற்சட்டையை கழட்டி அவர்களது கைகளை கட்டி ஓடவிட்டு சுட்டு படுகொலை செய்யப்பட்டனர்.
இந்தநிலையில், கிராம மக்கள் பலர் கிராமத்தை விட்டு வெளியேறியநிலையில் திரியாய் தமிழ் மகா வித்தியாலயத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்திருந்தவர்கள் மீதே இந்த வன்முறை சம்பவம் இடம்பெற்றிருந்ததாக மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |