சுற்றுலாத்துறை வளர்ச்சி: திருகோணமலைக்கு 70 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு

Sri Lankan Tamils Trincomalee Sri Lanka Politician Sri Lankan Peoples Tourism
By Fathima Jan 19, 2026 01:02 PM GMT
Fathima

Fathima

திருகோணமலை மாவட்டத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில், கந்தளாய் பகுதியை ஒரு முக்கிய சுற்றுலா மையமாக மாற்ற 70 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஷன் அக்மீமன தெரிவித்துள்ளார்.

கந்தளாய் நீர்த்தேக்கக் கரையில் இன்று(19.01.2026) நடைபெற்ற விசேட நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

நிதி ஒதுக்கீடு

நிதி ஒதுக்கீட்டின் கீழ், மேற்கொள்ளப்படவுள்ள முக்கிய மாற்றங்களாக அவர் பின்வருவனவற்றைக் குறிப்பிட்டுள்ளார்.

1. வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கான அடிப்படைத் தேவைகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல்.

2. மக்கள் நேரத்தை பயனுள்ள வகையில் கழிக்கக்கூடிய நவீன பொழுதுபோக்கு இடங்களை உருவாக்குதல்.

3. இதுவரை கடல்சார்ந்த பகுதிகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த கிழக்கு மாகாண சுற்றுலா வலயத்தை, உள்நாட்டு நீர்த்தேக்கப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்துதல்.

கந்தளாய் நீர்த்தேக்கம், அதனைச் சூழவுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க விகாரை மற்றும் ரம்மியமான இயற்கை சூழல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்த புதிய சுற்றுலா வலயம் அமையவுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தின் பொருளாதார நிலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.