இன்றைய வானிலை தொடர்பில் மக்களுக்க விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் இன்று(11) 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இன்றைய(11) வானிலை குறித்து திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையிலே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவித்துள்ளதாவது,
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வானிலை மாற்றம்
அத்துடன், நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேலும், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த நிலையில், வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30 - 40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
அத்துடன் மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன்போது இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். ஆகவே, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |