நெல்லிக்குளம் பகுதிக்கு சண்முகம் குகதாசன் களவிஜயம்
திருகோணமலை - மூதூர் கிழக்கு, சேனையூர் கிராம சேவகர் பிரிவில் உள்ள நெல்லிக்குளம் மலைத் தொடரின் பாறைகளை உடைப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளை தலைவர் சண்முகம் குகதாசன் குறித்த பிரதேசத்துக்கு விஜயம் செய்து மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை (08) பாறை உடைப்பு இயந்திரத்துடன் உடைப்பு வேலைகளை ஆரம்பிக்க முயன்ற போது அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனால் உடைப்பு வேலைகள் நிறுத்தப்பட்டன.
கடும் எதிர்ப்பு
ஆனால் செவ்வாய்க்கிழமை (11) காலை 9.45 மணிக்கு மீண்டும் மலை உடைப்பு வேலைகளை ஆரம்பித்த போது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பாறை உடைப்பு இயந்திரம் வேலைகளை ஆரம்பித்த போது அப்பகுதிக்கு அப்பகுதி மக்கள் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று எதிர்ப்பை வெளியிட்டனர்.
இதன் போது 1979 ஆம் ஆண்டின் 15 ம் இலக்க குற்றவியல் நடைமுறை சட்டக் கோவை 81 கீழ் சமாதான குழவை ஏற்படுத்தக் கூடிய செயல் ஒன்றை செய்த அடிப்படையில் சம்பூர் பொலிஸார் 10 பேரை செவ்வாய்க்கிழமை (11) கைது செய்து பொலிஸ் பிணையில் விடுவித்தனர்.
விடுவிக்கப்பட்ட 10 பேரும் மூதூர் நீதிமன்ற நீதிமன்றில் நேற்று புதன்கிழமை (12) மதியம் 12.20 மணிக்கு முன்னிலையானபோது நீதிமன்றமானது இன்று இவர்கள் அனைவரையும் சொந்தப் பிணையில் விடுவித்ததோடு குறித்த பிரதேசத்தை இம் மாதம் 15 ம் திகதியன்று நீதிவான் பார்வையிடுவதாக மன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த பகுதிக்கு விஜயம் செய்த இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளை தலைவர் சண்முகம் குகதாசன் குறித்த பிரதேசத்துக்கு விஜயம் செய்து மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.
விவசாயச் செய்கை
இதன் பின் ஊடகங்களுக்கு மக்கள் கருத்து தெரிவிக்கையில்,
இந்த மலையை உடைப்பதால் பல்வேறு இன்னல்களை மக்கள் எதிர்நோக்க வேண்டி ஏற்படும். எங்களது வாழ்வாதாரம் இங்கு தான் உள்ளது விவசாயச் செய்கை கால் நடை வளர்ப்பு போன்றன இதன் மூலம் பாதிக்கப்படலாம் .
அரசாங்கம் மக்களுக்காக தான் இருக்கிறது. அரசாங்கம் விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.” என்றனர்.