நிதி மோசடியில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்கள்!
இணையம் ஊடாக மக்களை ஏமாற்றி பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டு வந்த ஒரு குழுவை கைது செய்துள்ளதாக மேல் மாகாண குற்றப்புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலதிக விசாரணை
இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண்கள், தரமான தளபாடங்களை நியாயமான விலையில் விற்பனை செய்வதாகவும், அவற்றுக்கு உத்தரவாதம் வழங்குவதாகவும் இணையத்தளங்களில் விளம்பரங்களைப் பதிவிட்டுள்ளனர்.
இதனை நம்பி நாட்டின் பல பிரதேசங்களை சேர்ந்தவர்கள் பணத்தினை வைப்பு செய்துள்ள நிலையில், சுமார் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிக பணத்தை இவர்கள் திட்டமிட்டு மோசடி செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த குற்றங்களைச் செய்யப் பயன்படுத்தப்பட்ட ஒரு மொபைல் போன், தனியார் வங்கிகளில் இருந்து இரண்டு விசா அட்டைகள் மற்றும் மோசடிப் பணத்தில் ரூ. 87,000 ஆகியவற்றை சந்தேகநபர்களிடமிருந்து பொலிஸார் மீட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வுப் பிரிவு மேற்கொண்டுவருகின்றது.