ஐம்பது அடி பள்ளத்தில் வீழ்ந்து முச்சக்கர வண்டி விபத்து: மூவர் காயம்
ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வூட் - சென்ஜோன் டிலரி பகுதியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் காயமடைந்துள்ளனர்.
குறித்த முச்சக்கரவண்டி வீதியை வி்ட்டு விலகி ஐம்பது அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இவர்கள் காயமடைந்துள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து சம்பவம் இன்று (13.09.2023) மதியம் 12.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
ஆதார வைத்தியசாலையில் அனுமதி
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், பொகவந்தலாவ - மோராதோட்டப் பகுதியில் இருந்து ஹட்டனுக்கு சென்றுக் கொண்டிருந்த முச்சக்கரவண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
முச்சக்கரவண்டி சாரதி, அவரது மனைவி மற்றும் ஒன்றரை வயது குழந்தை ஆகியோர் குறித்த முச்சக்கரவண்டியில் பயணித்துள்ளனர்.
மேற்படி சாரதிக்கு தலைப்பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதோடு மூன்று பேரும் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுகின்றது.