டிட்வா சூறாவளியால் பெருமளவில் சேதமடைந்த மூன்று மருத்துவமனைகள்!
டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவுகளின் போது, பிரதானமாக மூன்று மருத்துவமனைகள் பெருமளவில் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மூன்று மருத்துவமனைகள்
இதற்கமைய, சிலாபம் ஆதார மருத்துவமனை, மஹியங்கனை மற்றும் வத்தேகம மருத்துவமனைகள் ஆகிய மூன்று மருத்துவமனைகள் பெருமளவில் சேதமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், 100 சிறிய மருத்துவமனைகள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சேதங்கள் குறித்து உத்தேச மதிப்பீடு இன்னும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
அவசர சிகிச்சை மட்டுமே
டிட்வா புயலால் சிலாபம் மருத்துவமனையிலுள்ள சி.டி ஸ்கேன் இயந்திரம் உட்பட அனைத்து முக்கிய மருத்துவ உபகரணங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த மருத்துவமனையில், வெளிநோயாளர் பிரிவுக்கான சிகிச்சை மற்றும் அவசர சிகிச்சை மட்டுமே தற்போது மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, உலக சுகாதார ஸ்தாபனம், தேசிய சுகாதார மேம்பாட்டு நிதிக்கு 53 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது.
பேரழிவுக்குப் பின்னர் தற்காலிக பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களின் சுகாதாரத் தேவைகள் குறித்து தொடர்ந்து சுகாதார அதிகாரிகள் கவனம் செலுத்தி வருவதாகவும் சுகாதார அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.