சந்திம வீரக்கொடியை அச்சுறுத்தியதாக இராணுவத் தளபதி, பாதுகாப்புச் செயலாளர் மீது குற்றச்சாட்டு
இராணுவ உயர் அதிகாரிகளின் ஊழல் மற்றும் வீண் செலவுகளை மட்டுப்படுத்துமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான தெரிவுக்குழுவில் நான் குறிப்பிட்ட போது பாதுகாப்பு செயலாளர், இராணுவ தளபதி ஆகியோர் எனக்கு அச்சுறுத்தல் விடுத்தார்கள் என எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
ஆகவே இவர்களை உடனடியாக பாராளுமன்ற ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமை தொடர்பான தெரிவுக்குழுவுக்கு அழைத்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் எதிரணியின் உறுப்பினர் சந்திம வீரக்கொடி சபையில் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (06) இடம்பெற்ற அமர்வின் போது சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சிறப்புரிமை மீறல் பிரச்சினை
தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற செயற்குழுவில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது இவ்வாறு தமக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்புச் செயலாளரும் இராணுவ தளபதியும் சண்டியர்களைப் போல் நாடாளுமன்ற உள்ளேயே தம்மை அச்சுறுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவ படை வீரர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு பதிலாக உயர் இராணுவ அதிகாரிகளுக்கு செலவிடும் அதிகளவான தொகையை குறைக்குமாறு தாம் பரிந்துரை செய்ததாகவும் இது தொடர்பில் இருவரும் எதிர்ப்பை வெளியிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.