நாடாளுமன்றத்தில் எம்.பிக்கள் அநாகரீகமாக நடந்து கொள்வதாக கருணா குற்றச்சாட்டு
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் அநாகரீமாக நடந்து கொள்வதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பிரதி அமைச்சருமான கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒரு குடையின் கீழ் அணிதிரள்வதன் மூலமே எமது பலத்தினை வெளிப்படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைமைக் காரியாலயம் இன்று (18.01.2024) மட்டக்களப்பு - கல்லடியில் திறந்து வைக்கப்பட்டது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
கட்சிக்கு அத்திவாரமிட்ட மக்கள்
மேலும் தெரிவிக்கையில், அம்பாறை மாவட்ட மக்கள் எமது கட்சிக்கு பாரிய அத்திவாரம் இட்ட மக்கள் என்பதனை நாங்கள் மறந்து விடக்கூடாது. இன்று 72 வருட வரலாற்றிலே முதன் முதலாக தமிழ் தேசிய கூட்டமைப்பை தோற்கடித்தவன் என்ற பெருமையை நாங்கள் அம்பாறை மாவட்டத்திலேயே நிரூபித்து காட்டினோம்.
அந்த அளவிற்கு அந்த மக்கள் நமக்கு ஒத்துழைத்தார்கள். பொதுவாக உங்களுக்கு தெரியும் பழமொழி ஒன்று இருக்கின்றது. நிறைவாகும் வரை மறைவாக இரு என்று நாங்கள் கடந்த காலங்களில் எம்மை தயார் படுத்துவதற்காக உண்மையிலே மறைவாக இருந்தது உண்மையான விடயம்.
தற்போது எங்களின் தேவையை மக்கள் புரிந்து
கொண்டிருக்கின்றார்கள். அது உங்களுக்கு தெரிந்த விடயம் இன்று அந்த வகையில்
மீண்டும் நமது தலைமைச் செயலகத்தை ஆரம்பித்திருக்கின்றோம். இதில் அரசியல் பணிகளை
தீவிரமாக விஸ்தரிப்பதற்கு நாங்கள் திட்டமிட்டு இருக்கின்றோம்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகள்
கடந்த வரலாற்றிலே எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் இருக்கின்றார்கள். அவர்களுடைய செயற்பாடுகள் உங்களுக்கு நன்றாக தெரியும். அனைவரையும் குறிப்பிடவில்லை.
தனிப்பட்ட குரோதங்களை விவாதிப்பதற்கான களமாக தான் அவர்கள் நாடாளுமன்றத்தை பயன்படுத்துகிறார்களே தவிர நாடாளுமன்றத்தின் வளங்களை கொண்டு வருவதற்காக அல்லது அங்குள்ள எம்முடைய மக்களின் தேவைகளை பூர்த்தியாவதற்குரிய செயல்பாடுகளை நாடாளுமன்றத்தில் ஏற்படுத்தி அந்த வளங்களை கொண்டு வருவதற்காக அவர்கள் முயற்சிப்பதாக இல்லை.
மாறாக பார்க்க போனால் எல்லா மாவட்டங்களையும் விட எங்களுடைய மாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினர்கள் மிகவும் அநாகரீகமான முறையில் நாடாளுமன்றத்தில் சண்டையிடுவதும், கூச்சலிடுவதும் தனிப்பட்ட விரோதங்களை நாடாளுமன்றத்தில் பகிர்ந்து கொள்வது
மாத்திரமே இவர்களது வேலையாக இருக்கின்றது. இதனை மக்கள் நன்கு புரிந்து
கொள்வார்கள்.
ஆகவே எதிர்காலத்தில் சிறந்த தகுதியான நாடாளுமன்ற உறுப்பினர்களை உருவாக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.