எதிர்வரும் மே மாதத்தின் இறுதி வரை வெப்பநிலை நீடிக்கும்
தற்போது நிலவி வரும் அதிக வெப்பநிலையானது எதிர்வரும் மே மாதத்தின் இறுதி வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு விடுத்துள்ளது.
இதேவேளை, அதிக வெப்பம் காரணமாக வெப்ப பக்கவாதம் (Heat Stroke) ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாக வைத்தியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதன்படி, ஒரு நாளின் நண்பகல் 11 மணி முதல் மாலை 4 மணி வரையிலான நேரத்தை மிகவும் கவனமாக செலவிடுமாறு அவர்கள் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அரச ஆயுர்வேத வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் சேனக கமகே; இந்த நாட்களில், இந்த கடுமையான வெப்ப நிலை உடலுக்கு மிகவும் மோசமானது,
ஒருவரது உள் உடல் வெப்பநிலை 40 செல்சியஸ் அல்லது அதனை விட அதிகமாக காணப்படின் அது மிகவும் ஆபத்தான ஒரு நிலைமையாக கருதப்படுகிறது. இதன் மூலம் இதயம் மூளை, சிறுநீரகம் மற்றும் நரம்பு மண்டலத்திற்கு ஆபத்து அதிகமாக காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இது அதிகமாக சக்கரை வியாதி மற்றும் புற்று நோய் போன்ற நோயாளர்களும் வீதியோரங்களில் வேலை செய்பவர்கள், பொலிஸார் அதிக கவனம் செலுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, குறித்த இந்த தினங்களில் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டங்கள் அதிகளவில் இடம்பெற்று வருவதால் வெளிப்பிரதேசங்களில் நடத்தும் விளையாட்டுக்களை காலை வேளையில் நடத்துமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
வெளிர் நிற ஆடைகளை அணிய ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதோடு, சுத்தமான நீரைப் பருகவும் , சராசரியாக 2 லீட்டர் அளவில் நீரைப் பருகவும், குளிர்ப் பானங்களை தவிர்க்குமாறும் அதற்குப் பதிலாக இளநீர் மற்றும் மூலிகை பானங்களை அருந்துமாறும்,
அதிகளவில் வெளியே செல்வதை தவிர்க்குமாறும் அரச ஆயுர்வேத வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் தெரிவித்தார். இதேவேளை, அதிக வெப்பத்தினால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதகமான விளைவுகளைத் தவிர்ப்பதில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டுமென ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
அதன்படி, அதிக திரவங்களை அருந்துவது வெப்பமான காலநிலையிலிருந்து சிக்கல்களைக் குறைக்க உதவும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இன்றைய நாட்களில் தோல் நோய்கள் அதிகரித்து வருவதாகவும், சிறு குழந்தைகள் தினமும் இரு வேளை குளிக்க வேண்டும் எனவும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
சோர்வு, தூக்கம், உடல்வலி, மற்றும் வாந்தி போன்றவை குறித்த இந்த நோய்க்கான அறிகுறிகள் என அவர் தெரிவித்துள்ளார் . குழந்தைகளை சுமார் 20 நிமிடம் தண்ணீரில் இருக்க விடுங்கள்.இதன் மூலம் சரும பிரச்சனைகளை குறைக்கலாம் என ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இன்று 11 மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் வெப்பநிலை 39 முதல் 45 பாகை செல்சியஸ் வரை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கிழக்கு, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் ஆபத்தான வெப்பமான காலநிலை நிலவுவதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.