30 வருடமாக மூடப்பட்டிருந்த பாடசாலை இன்று திறப்பு

Batticaloa Sri Lanka
By Nafeel Apr 27, 2023 03:43 PM GMT
Nafeel

Nafeel

மட்டக்களப்பு நகரில் கடந்த 30 வருடகாலத்திற்கு மேலாக மூடப்பட்டிருந்த சிங்கள மகா வித்தியாலயம் மும்மொழி பாடசாலையாக இன்று (27) திறந்து வைக்கப்பட்டது.

கடந்த கால போர் சூழல் காரணமாக குறித்த பாடசாலை மூடப்பட்டிருந்த அதேநேரம் குறித்த பாடசாலையானது இராணுவத்தின் முகாமாக இருந்து வந்தது. இந்த நிலையில் கிழக்கு மாகாண ஆளுனர் அநுராதா ஜகம்பத் மேற்கொண்ட முயற்சி காரணமாக குறித்த பாடசாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளர் திருமதி. சுஜாதா குலேந்திரகுமார் தலைமையில் நடைபெற்றது. இந்த பாடசாலை திறப்பு விழாவில் கிழக்கு மாகாண ஆளுனர் அநுராதா ஜகம்பத் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எம்.டபிள்யு.ஜி. திஸாநாயக்க, கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் செல்வி அகிலா கனகசூரியம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இராணுவத்தினரின் உதவியுடன் குறித்த பாடசாலை புனரமைக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டது.

மூன்று மொழிகளையும் கற்கும் வசதிகளுடன் இந்த பாடசாலையாக இது திறந்து வைக்கப்பட்டுள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.

எனினும் கிழக்கு மாகாண ஆளுனர் அநுராதா ஜகம்பத் இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் அவசரஅவசரமாக இந்த பாடசாலை திறக்கப்பட்டமை தொடர்பில் பல்வேறு தரப்பினராலும் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.