கல்முனையில் அதிகாரிகளின் அசமந்த போக்கு : விசனம் வெளியிடும் மக்கள்
கல்முனை நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் வீதிகளில் திருத்தப் பணிகள் மேற்கொண்ட பின்னர் முறையாக அதனை செப்பனிடவில்லை என பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
அதிக சனத்தொகை நடமாட்டமுள்ள வீதிகளில் ஒன்றான வைத்தியசாலை வீதி மற்றும் மாளிகா சந்தி வீதி போன்ற வீதிகளிலே இவ்வாறு முழுமையான வேலை செய்யாமல் காணப்படுகிறது.
குறித்த வீதிகளை முறையாக செப்பனிட பொதுமக்கள் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அதிகாரிகள், ஊழியர்களை அந்தந்த சந்தர்ப்பங்களில் கேட்டுக் கொண்ட போதிலும் அதற்கு எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என மக்கள் விசனம் மேலும் தெரிவிக்கிறார்கள்.
அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மை
அத்தோடு, இந்த வீதிகளில் தற்போதைய, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரதிநிதிகள், அரச உயர் அதிகாரிகளின் வீடு, அலுவலகம், பாடசாலைகள், பொது நிறுவனங்கள் என்பனவும் அமைந்துள்ளன.
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான இந்த வீதிகளை கடந்த காலங்களில் இருந்த அரசாங்கங்கள் காபட் வீதியாக சீரமைத்து மக்கள் பாவனைக்கு வழங்கியிருந்த போதிலும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் இவ்வாறான பொடுபோக்கான செயல்களினால் மழை காலங்களில் பொதுமக்கள் பலத்த அசௌகரியங்களை எதிர் நோக்க வேண்டியுள்ளது.
வடிகான்கள் கூட மண்களால் நிரப்பப்பட்டு வெள்ள நீர் வடிந்தோட முடியாத நிலையும் சில இடங்களில் உள்ளதை காணமுடிகிறது.
மேலும், இந்த விடயத்தில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபை உரிய அதிகாரிகள், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அதிகாரிகள் துரிதகதியில் கவனம் செலுத்தி வீதிகளை மக்கள் பாவனைக்கு உகந்த வகையில் திருத்தி அமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |



