கல்லால் தாக்கி மனைவியைக் கொலை செய்த கணவர் கைது
மனைவியின் தலையில் பெரிய கல் ஒன்றால் தாக்கி அவரைப் படுகொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
லுணுகலை – ஜனதாபுர , தம்பபிட்டிய வத்த கும்புக்கன் ஓயாவில் இருந்து 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய், தலைப் பகுதியில் காயங்களுடன் நேற்றுமுன்தினம் சடலமாக மீட்கப்பட்டார்.
தாயின் மரணத்தில் சந்தேகம்
இதையடுத்து 17 வயதுடைய மகள் தனது தாயின் மரணத்தில் சந்தேகம் உள்ளது என்று பொலிஸாரிடம் கூறினார்.
அதற்கமைய பொலிஸார் விசாரணையை ஆரம்பித்தனர். இதன்போது 36 வயதுடைய ஓட்டோ சாரதி ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.
அதன்பின்னர் தலைமறைவாகி இருந்த 45 வயதுடைய மேற்படி பெண்ணின் கணவர் நேற்று இரவு லுணுகலை நகரில் வைத்து லுணுகலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையின்போது சிறிய கல் ஒன்றால் மனைவியின் தலைப் பகுதியைத் தான் தாக்கினார் எனவும், பின்னர் பெரிய கல் ஒன்றால் தாக்கிக் கொலை செய்தார் எனவும் சந்தேகநபர் தெரிவித்தார் என்று பொலிஸார் கூறினர்.
இருவருக்கும் இடையே மிக நீண்ட காலமாகக் குடும்பத் தகராறு காணப்பட்டது என்றும், இருவருக்கும் இடையே விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகின்றது என்றும், பெண்ணின் வீட்டுப் பகுதிக்கு குறித்த நபர் செல்லக்கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் பொலிஸாரின் விசாரணைகள் நிறைவடைந்ததன் பின்னர் பசறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படுவா்ர என்றும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.