கண்டி கடவுச்சீட்டு அலுவலகத்தில் கடும் பதற்றம்!... அதிகாரிகள் - பொதுமக்கள் முறுகல்
கண்டி, குடிவரவு குடியகல்வு திணைக்கள அலுவலக அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் இடையே ஏற்பட்ட கடும் முறுகல் நிலை காரணமாக அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
கண்டி குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வதற்காக தூர இடங்களில் இருந்து வருகை தருவோர் நாள் கணக்கில் காத்திருக்க நேர்ந்துள்ளது.
இந்நிலையில், இன்று (28.02.2024) காலை அவ்விடத்துக்கு வந்த வேறொரு குழு, பல நாட்களாக காத்திருந்தவர்களை மீறி வரிசையில் முந்திச் செல்ல முற்பட்டதையடுத்து இருதரப்புக்கும் இடையில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளது.
பணம் பறிக்கும் கும்பல்
அதேவேளை, வரிசையில் நின்று கடவுச்சீட்டு பெற வரும் நபர்களிடம், திட்டமிட்ட கும்பல் ஒன்று சட்டவிரோதமாக பணம் பறிப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
இதற்கு கண்டியில் உள்ள குடிவரவு குடியகல்வு திணைக்கள அலுவலகத்தில் இருந்தும் ஆதரவு கிடைத்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
முறுகல் நிலை
மேலும், குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளின் முறையற்ற செயற்பாடுகள் காரணமாக தாம் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இவற்றால், தற்போது பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் முறுகல் நிலை ஏற்பட்டு, கடவுச்சீட்டு வழங்கும் செயற்பாடுகளிலும் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.