கிழக்கில் மண் அகழ்வதற்கு விதிக்கப்பட்ட தற்காலிக தடை
மட்டக்களப்பில் ஏற்பட்ட இயற்கை சீற்றத்தின் காரணமாக மண் அகழ்வை தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்ய மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ குழு கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானமானது நேற்று(02) மட்டக்களப்பு செயலகத்தின் அரசாங்க அதிபர் மாநாட்டு மண்டபத்தில் பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைருமான அருண் ஹேமசந்திரவின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான ஐஸ்டினா முரளிதரனின் ஒருங்கிணைப்பில் இடம் பெற்றது.
சட்டவிரோதமாக அகழப்படும் மண்
விசேடமாக செங்கலடி பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் அதிகமானோர் ஈடுபடுவதனால் வயல் நிலங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளது தொடர்பாக கலந்துரையாடப்பட்டு, தற்காலிகமாக குறித்த பகுதிக்கான மணல் அகழ்வு அனுமதிப்பத்திரங்களை இடைநிறுத்தி வைப்பதற்கான தீர்மானம் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரினால் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
மேலும் இந்த கூட்டத்திற்கு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கந்தசாமி பிரபு, இராசமாணிக்கம் சாணக்கியன், ஞானமுத்து சிறிநேசன், வைத்தியர் இளையதம்பி ஸ்ரீநாத், கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், முஹம்மட் சாலி நளீம் ஆகியோர் கலந்து கொண்டு தமது ஆக்கபூர்வமான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் முன்வைத்திருந்தனர்.
தொடர்ந்தும் இந்த கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டவை,
விசேடமாக கடந்த ஒரு சில காலமாக பெய்த மழை காரணமாக அதிகமாக மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல், இடம் பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்தமையினால் அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகள், மற்றும் சேத விபரங்களை மதிப்பீடு செய்வதன் முக்கியத்துவம் போன்ற விடயங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
முன்னாயத்தம்
அது மட்டுமல்லாது இனி வரும் காலங்களில் ஏதேனும் அனர்த்தங்கள் ஏற்பட்டால் அதற்கான முன்னாயத்த தயார்படுத்தல்களை எவ்வாறாக மாவட்ட மட்டத்தில் முன்னெடுக்க வேண்டும் என மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரினால் அதிகாரிகளுக்கு ஆலோசனை முன்வைக்கப்பட்டது.
அத்துடன் மாவட்டத்தில் அனர்த்தங்கள் ஏற்படக் காரணமாக திகழ்ந்து வரும் விடையங்கள் தொடர்பாக மக்கள் பிரதிநிதிகளினால் முன்வைக்கப்பட்டது.
இதற்கிடையில் விவசாய பாதிப்பிற்கான நட்டஈடு வழங்குதல், போக்குவரத்து, கல்வி மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டெலுவதற்கு தேவையான ஏனைய விடையங்கள் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
மேலும் இதில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான சுதர்ஷனி ஶ்ரீகாந்த், நவரூபரஞ்சனி முகுந்தன் (காணி), மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத், மத்திய மற்றும் மாகாண நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள், உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள், ஆணையாளர்கள், மாவட்ட செயலக அதிகாரிகள், பிராந்திய சுகாதார சேவைகள் அதிகாரிகள், கல்வி திணைக்கள அதிகாரிகள், மீன் பிடி, விவசாய திணைக்கள அதிகாரிகள், வீதி அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் துறைசார் திணைக்களங்களின் அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |