சமந்தாவுக்கு பிறந்தநாள் பரிசாக கோவில்: ஆந்திராவில் நாளை திறப்பு
விஜயவாடா: ஆந்திர மாநிலம் குண்டூரில் சமந்தா ரசிகர் ஒருவர், அவர் வீட்டிலேயே சமந்தாவுக்கு கோயில் கட்டியுள்ளார்.
சமந்தா பிறந்தநாளுக்கு கோவிலை திறக்க திட்டமிட்டுள்ளார்.
இந்திய சினிமா பிரபலங்களில் ஒருவராக உள்ளார் சமந்தா. அதோடு நாடு முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களையும் கொண்டுள்ளார்.
இந்நிலையில் நடிகை சமந்தாவுக்கு தற்போது ஆந்திர மாநிலத்தில் கோவில் கட்டப்பட்டுள்ளது.
குண்டூர் அருகே உள்ள பாபட்லா மாவட்டம், அலபாடு கிராமத்தை சேர்ந்த தெனாலி சந்தீப் எனும் ரசிகர், சமந்தாவுக்கு கோயில் கட்டி வருகிறார். இதன் திறப்பு விழா நாளை நடைபெறுகிறது.
இதுகுறித்து பேசிய சந்தீப், “சமந்தா, பிரத்யூஷா அறக்கட்டளை மூலம் பல சேவைகளை செய்து வருவதை அறிந்து அவர் மீது மதிப்பு கூடியது. இதனால் அவருக்கு கோயில் கட்ட தீர்மானித்தேன்.
இதற்கு எங்கள் வீட்டில் ஒரு பகுதியை ஒதுக்கி கோயில் கட்டி வருகிறேன். தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. நாளை திறப்பு விழா நடக்கிறது”
என்றார். தென்னிந்திய ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நடிகைகளுக்கு கோவில் கட்டி வழிபாடு செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். முதன் முதலில் நடிகை குஷ்புவுக்குதான் ரசிகர்கள் கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்து கொண்டாடி தீர்த்தனர்.
அவரை தொடர்ந்து நடிகை நயன்தாரா, ஹன்சிகா மோத்வானி, நமீதா ஆகியோருக்கு ரசிகர்கள் தமிழகத்தில் கோவில் கட்டி வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் அந்த வரிசையில் நடிகை சமந்தாவும் இணைந்துள்ளார்.