திருகோணமலை சண்முகா வித்தியாலயத்தில் அபாயாவிற்கு அனுமதி! (Video)
திருகோணமலை நீதிமன்றத்தில் சண்முகா வித்தியாலயத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாக அங்கே கற்றுக் கொடுத்த பெண் ஆசிரியை அபாயா அணிந்து சென்றதன் பிற்பாடு ஏற்பட்ட முரண்பாடுகளை அடுத்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்திருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஸ்ஸாரப் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், எனவே இந்த சர்ச்சை மூலமாக இந்த நாட்டிலே சகல இனத்திற்கும், சகல மதத்திற்கும் தமது மத கடமைகளை, நம்பிக்கைகளை பேணும் வகையில் நடந்து கொள்வதற்கான உரிமை அரசியலமைப்பின் படி உத்தரவாதமளிக்கப்பட்டிருந்த போதும் கூட தமிழ் பேசும் சமூகமாக வாழ்கின்ற திருகோணமலை மாவட்டத்திலே இந்த சண்முகா வித்தியாலத்திலே ஒரு முஸ்லிம் பெண் அபாயா அணிந்து செல்வதற்கான தடை விதிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றம் வரை சென்ற பிரச்சினை
பாடசாலை சட்டம் அனுமதிப்பதில்லை என்பதால் நீங்கள் அதனை அணியக்கூடாது என்பதாக எழுந்த ஒரு சர்ச்சை வெவ்வேறு வடிவங்கள் பெற்று நீதிமன்றம் வரைக்கும் சென்றது.
நீதிமன்றத்திலே அந்த பெண்ணினுடைய, அந்த ஆசிரியையினுடைய உரிமையை வென்றெடுப்பதற்காக மிகவும் திடமாக குரல் கொடுத்து வந்த குரல்கள் அமைப்பிற்கு நான் நன்றியையும், பாராட்டையும் தெரிவிக்கிறேன்.
அந்த ஆசிரியையின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி மட்டுமல்ல. அத்துடன் இந்த சம்பவம் நடந்த போது அதனை அரசியல் ரீதியாக இனங்களுக்கு இடையில் இனக்கப்பாட்டை ஏற்படுத்தும் வகையில் தீர்த்திருக்க முடியும்.
எனினும் இனிமேல் அபாயா அணிவதற்கு பாடசாலை நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன் மன்னிப்பும் கோரியுள்ளார்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்.