உயிரை கடமைக்காக தியாகம் செய்த பொலிஸ் உத்தியோகத்தரின் பெற்றோருக்கு உயர் அதிகாரி வழங்கிய வாக்குறுதி
ஜா-எல பகுதியில் வைத்து ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரின் பெற்றோருக்கு உயிரிழந்தவரின் சம்பளம் தொடர்ச்சியாக வழங்கப்படும் என மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பகுதியில் உள்ள அவரது வீட்டில் இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
பொலிஸ் மா அதிபர் வழங்கிய வாக்குறுதி
அவர் தற்போது, பொலிஸ் சார்ஜன்ட் பதவிக்கு தரமுயர்த்தப்பட்டுள்ளார். எந்தவொரு பொலிஸ் உத்தியோகத்தரும் முறையாக பயிற்சி பெற்ற பின்னரே சேவைக்கு உள்வாங்கப்படுவர்.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தரும் அவ்வாறே சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டார். மேல்மாகாணத்தில் தொடர்ச்சியாக போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதற்கமைய, போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதான சந்தேகநபர் தப்பி ஓடுவதற்கு முயற்சி செய்திருந்தார். அவரை பிடிக்கும் நோக்கிலேயே குறித்த பொலிஸ் உத்தியோகத்தரும் தமது வாழ்க்கையை பொருட்படுத்தாமல் கடமையை நிறைவேற்ற முற்பட்டுள்ளார்.
எனினும் சிறந்த நீச்சல் பயிற்சி இருந்தும் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் நீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.
இந்தநிலையில், அவரின் இழப்பு கவலையளிப்பதாக மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் குறிப்பிட்டுள்ளார்.
இதன்காரணமாக அவரது பெற்றோரின் வாழ்க்கையை கொண்டு செல்வதற்காக அவரது வேதனம் அவர்களுக்கு வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.