தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது காலத்தின் தேவை: சிறீதரன் சுட்டிக்காட்டு

Election Commission of Sri Lanka S. Sritharan Sri Lanka Presidential Election 2024
By Madheeha_Naz Apr 15, 2024 01:49 AM GMT
Madheeha_Naz

Madheeha_Naz

தமிழ் மக்களின் திடமான அரசியல் கொள்கையைப் பறைசாற்றுவதற்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது காலத்தின் தேவை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டப் பணிமனையில் இன்று நடைபெற்ற புதுவருடப்பிறப்பு சமய வழிபாடுகள் மற்றும் கைவிசேடம் வழங்கி வைத்ததன் பிற்பாடு, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும்  குறிப்பிடுகையில்,

தமிழ் மக்களின் அபிலாசை

தமிழர்களின் தேசிய அபிலாசைகளை நிறைவேற்றுவதற்காக பல ஜனாதிபதித் தேர்தல்களில் பலதரப்பட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்கியிருந்தோம்.

ஆனால் அவர்கள் தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றவில்லை. நாம் ஆதரவு அளித்த பல பேர் தேர்தலில் தோல்வியடைந்தனர்.

தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது காலத்தின் தேவை: சிறீதரன் சுட்டிக்காட்டு | Tamil Candidate In The Presidential Election

ஆனால் வெற்றி பெற்ற மைத்திரி உள்ளிட்டோர் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை பெற்றுத்தரவில்லை. இதனால் தான் நீண்ட நெடும் அனுபவத்தின் அடிப்படையில் பெரும்பாலானவர்கள் மத்தியில் தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான கருத்து நிலவி வருகிறது.

தமிழினப் படுகொலைக்கு நீதி வேண்டும், சர்வதேச விசாரணை வேண்டும், தமிழர்களுக்கு இறையாண்மை வேண்டும் என்பதில் தீர்க்கமாக உள்ள தமிழர்களின் மனோநிலையை சர்வதேச ரீதியில் ஒரு செய்தியாக பதிவுசெய்வதற்கான சந்தர்ப்பமாக இதனைப் பயன்படுத்த முடியும்.’’ என்றார்.

கச்சதீவு இலங்கைக்குரியது

தொடர்ந்து கச்சதீவு குறித்தி கருத்து தெரிவிக்கையில்,

இந்தியாவின் ஆளுகைக்குள் கச்சதீவு  இருந்தாலும் ஒப்பந்தத்தில் கச்சதீவு இலங்கைக்குரியது. வடக்கிலுள்ள தமிழ் கடற்றொழிலாளர்கள் கச்சதீவில் கடற்தொழிலில் ஈடுபடுகின்றனர்.

தமிழ் நாட்டில் இருக்கின்ற சகோதரர்கள் ஈழத்தின் தொப்புள் கொடி உறவுகள் பாதிப்படைவதை  விரும்பமாட்டார்கள். தமிழ் நாட்டில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரங்கள் தான் இதனைப் பேசுபொருளாக்கியுள்ளது’’ எனவும் கூறியுள்ளார்.