யாழில் தொடரும் வன்முறை: காவல்துறை அத்தியட்சகரின் பொறுப்பற்ற பதில்

Jaffna Sri Lanka Police Investigation Crime
By Raghav Jul 08, 2024 11:26 AM GMT
Raghav

Raghav

யாழ்ப்பாணத்தில் (Jaffna) இடம்பெறும் வாள்வெட்டு வன்முறை செயற்பாடுகளில் ஈடுபடுவோர் தொடர்பில் தெரிந்த போதும் அவர்களை கைது செய்ய முடியவில்லை என யாழ். பிராந்திய உதவி காவல்துறை அத்தியட்சகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்திக் குழு கூட்டத்தின் போது யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் வாள்வெட்டு வன்முறை தொடர்பாக காவல்துறையிடம் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது, ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனை மிரட்டிய வன்முறை கும்பல் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) வீட்டிற்கு முன்னால் வாள்களுடன் பயணித்த வன்முறைக் கும்பல் தொடர்பில் ஏன் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என அபிவிருத்தி குழுவினரால் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

கணினி குற்ற புலனாய்வு

இந்நிலையில், யாழ். பிராந்திய உதவி காவல்துறை அத்தியட்சகர் ஒருவர், "எமக்கு அவர்களைத் தெரியும் ஆனால் கைது செய்ய முடியவில்லை என பதிலளித்துள்ளார்.

இதற்கு பதில் அளிக்கும் முகமாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சாள்ஸ், ”காவல்துறையினர் எவ்வாறு இப்படி பொறுப்பற்ற விதத்தில் பதில் கூற முடியும்? இவ்வாறான சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் வெளிநாட்டிற்கு தப்பி செல்ல முடியாது.

யாழில் தொடரும் வன்முறை: காவல்துறை அத்தியட்சகரின் பொறுப்பற்ற பதில் | Sword Incidents Have Increased In Jaffna

அவர்கள் இங்கே தான் இருக்க வேண்டும். அவர்களை ஏன் இதுவரை கைது செய்யவில்லை உங்களுக்கு கீழே தான் கணினி குற்ற புலனாய்வு (Cybercrime) இயங்குகிறது. அதன் ஊடாக அவர்களை கைது செய்ய முடியும்.

அல்லது குறித்த சந்தேக நபர் வசிக்கும் கிராம உத்தியோகத்தரிடம் அவரது விவரங்களை திரட்டி அதன் ஊடாக அவர்களை கைது செய்ய முடியும். இவ்வாறு குற்றவாளிகளைக் கைது செய்வதற்கு பல்வேறு வழிகள் காணப்படுகின்ற போதிலும் ஏன் காவல்துறையினரால் இதுவரை எவரையும் கைது செய்ய முடியவில்லை.

காவல்துறை திணைக்களம்

'ஒப்ரேஷன் சக்சஸ் பேசன்ட் டெத்' என்று கூறுவது போல் உள்ளது உங்களது பதில்” என குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் (Angajan Ramanathan), "காவல்துறை குற்றவாளிகளைக் கைது செய்வதற்கு நாங்கள் தான் சொல்லிக் கொடுக்க வேண்டுமா அப்படியாயின் காவல்துறை திணைக்களம் ஏன் இயங்குகிறது வாள்வெட்டு கும்பல்கள் தொடர்பில் நீங்கள் இவ்வாறு பதிலளிக்க முடியாது.

யாழில் தொடரும் வன்முறை: காவல்துறை அத்தியட்சகரின் பொறுப்பற்ற பதில் | Sword Incidents Have Increased In Jaffna

சம்பவம் இடம்பெற்று இவ்வளவு நாட்கள் தாண்டியும் ஏன் எவரையும் கைது செய்யவில்லை. ஆட்களை தெரியும் கைது செய்ய முடியாது என்று கூறுவது காவல்துறையினர் மீதே சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது” என கூறியுள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள்