மட்டக்களப்பில் அதிகரிக்கும் வாள் வெட்டு சம்பவங்கள்...! பொறுப்பெடுக்க தயங்கும் பொலிஸ்
மட்டக்களப்பு - செங்கலடி ஐயன்கேணி, ரமேஸ்புரம் பகுதிகளில் அதிகரிக்கும் வாள் வெட்டுச் சம்பவங்களினால் மக்கள் அச்சத்தில் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.
இரண்டு வாள் வெட்டுக் குழுக்களுக்கு இடையிலான தகராறு காரணமாக குறித்த பகுதிகளில் அன்மைக்காலமாக அதிக அளவிலான வாள் வெட்டுச் சம்பவங்கள் பதிவாகி உள்ள நிலையில் பொலிஸாரால் இதனை கட்டுப்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது.
வாள் வெட்டு தாக்குதல்
இந்நிலையில் நேற்றைய தினம் (13) செங்கலடி ரமேஸ்புரம் பகுதியில் நடைபெற்ற வாள் வெட்டுச் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
வியாபார நிலையம் ஒன்றில் மக்கள் பார்த்திருக்கும் போது மிகச் சாதாரணமாக வந்த இருவர் ஒரு இளைஞரை மிக கொடூரமாக கோடரியால் வெட்டும் காட்சிகள் இந்த நாட்டில் சட்ட ஒழுங்கும் பாதுகாப்பும் இருக்கின்றதா இல்லையா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
அத்துடன் குறித்த வாள் வெட்டுச் சம்பவம் நடைபெற்று இரண்டு மணித்தியாலங்களுக்கு பிறகே பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்துள்ளனர்.
பொலிஸாரின் நடவடிக்கை
சுமார் இரண்டு மணித்தியாலங்களாக சம்பவம் நடைபெற்ற வியாபார நிலையத்தின் உரிமையாளர் 119 அவசர பொலிஸ் இலக்கத்திற்கு அழைத்தும் அவர்கள் பதிலளிக்கவில்லை.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் சம்பவம் குறித்து இதுவரை முறைப்பாடு கிடைக்கவில்லை அதனால் எதுவும் செய்ய முடியாது என்று கூறிச் சென்றுள்ளனர்.
இலங்கையின் பாதுகாப்புதுறை குற்றம் நடப்பதை தடுப்பதற்கு முயற்சிக்காது குற்றம் நடந்தபின்னர் அது குறித்து யாரும் முறைப்பாடு செய்தால் அதனை பதிவு செய்து விசாரணை செய்வதற்கே உருவாக்கப்பட்டதா என்ற அளவுக்கு மிக மோசமாக நடந்து கொண்டதாக அங்கிருக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |