மட்டக்களப்பில் AI உதவியுடன் 5 நிமிடங்களில் கவிதை : சோழன் சாதனை!
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் கல்வி பயிலும் 4 மாணவர்களினால் AI தொழிநுட்பத்தினை பயன்படுத்தி சோழன் உலக சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு நேற்று (09) மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் நடுவர்கள் முன்னிலையில் இடம்பெற்றுள்ளது.
இதனடிப்படையில், கடந்த பல மாதங்களாக AI தொழில்நுட்பத்தின் பல்வேறு வாய்ப்புகளைப் பற்றி தேடிக்கற்று அதன் அடிப்படையில் அவர்கள் மேற்கொண்ட முயற்சி சோழன் உலக சாதனைக்கு வழிவகுத்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாதனைச் சிறுவர்கள்
குறித்த சோழன் சாதனையினை நிகழ்த்திய மாணவர்கள் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் கல்வி பயிலும் ப்ராங்க் மிலன் லியோன், ரோஹித், யானுவர்ஷன் மற்றும் ஜோனதன் ஆவார்கள்.
மேலும், நடுவர்களால் கொடுக்கப்பட்ட போதைப்பொருள் அற்ற உலகம் என்ற தலைப்பில் கவிதை எழுதி, அதை AI தொழில்நுட்பத்தின் மூலம் பாடலாக மாற்றியமைத்து அதே இடத்தில் வெளியிட்டுள்ளனர்.
மாணவர்கள் மேற்கொண்ட முயற்சி 4 நிமிடங்கள் மற்றும் 23 நொடிகளில் காணப்பட்டதுடன் இதனை உலக சாதனையாகவும் பதிவு செய்துள்ளனர்.
குறித்த நிகழ்வில் சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் துணைத் தலைவர் ஸ்ரீ நாக வாணி ராஜா, மட்டக்களப்பு மாவட்டத் தலைவர் கதிரவன் த. இன்பராசா, மட்டக்களப்பு மாவட்டத்தின் பொதுச்செயலாளர் சிவ வரதகரன் மற்றும் செயற்குழு உறுப்பினர் முகமது ஃபர்ஸான் போன்றோர் நடுவர்களாக கடமையாற்றியுள்ளனர்.
அதிதிகளின் பாராட்டும் கௌரவிப்பும்
இதன்போது சோழன் நடுவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக பங்கு கொண்டவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து சோழன் உலக சாதனை படைத்த நான்கு மாணவர்களுக்கும் சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் அடையாள அட்டை போன்றவற்றை வழங்கிப் பாராட்டியுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் விருதினர்களாக புனித மிக்கேல் கல்லூரியினுடைய தலைமை ஆசிரியர் ஏ.பி. ஜோசப், சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் கனேடிய நாட்டிற்கான தலைவரின் தாயார் பேரின்பம் பார்வதி மற்றும் பீப்பள் ஹெல்பிங் பீப்பள் பவுண்டேஷன் சார்பாக மோசஸ் ஜேசுதாசன் ஆகியோர் பங்கு கொண்டு சிறப்பித்துள்ளனர்.
மேலும் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கு கொண்ட அருட்தந்தை போல் சற்குணநாயகம், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மூத்த மருத்துவ விரிவுரையாளர் வைத்தியர் ஜி. ஆர். பிரான்சிஸ், நச்சுயியல்துறை மருத்துவர் பிருந்தா கோமகராஜா ஆகியோரால் மாணவர்களுக்கு பரிசளிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் சோழன் உலக சாதனை படைத்த மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் நான்கு மாணவர்களையும் ஆசிரியர்கள் மாணவர்கள் என அனைவரும் வாழ்த்திப் பாராட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |













