வேலைநிறுத்தங்கள் மற்றொரு அரகலயவின் தொடக்கமாக இருக்கலாம்: பந்துல
நாட்டில் நிலவும் வேலைநிறுத்தங்கள் தேசத்தை சீர்குலைக்கும் மற்றுமொரு ‘அரகலய’வின் ஆரம்பமாக இருக்கலாம் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் வைத்து இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “இன்று நிலவும் வேலைநிறுத்தங்கள், நாடாளுமன்ற வளாகத்தை எரிப்பதில் முடிவடையக்கூடிய நாட்டை ஸ்திரமின்மைக்கு உட்படுத்துவதற்கான ஒரு பயிற்சியின் தொடக்கமாக இருக்கலாம்.
வேலைநிறுத்தம் செய்பவர்கள் சம்பளத்தை உயர்த்துவதற்கான சாத்தியமற்ற கோரிக்கையை முன்வைக்கின்றனர்.
ஊதிய உயர்வு
தொடருந்து திணைக்கள ஊழியர்கள் மற்றும் பிறர் கோரும் ஊதிய உயர்வைச் சந்திக்க நிதியை உருவாக்க, மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT) மற்றும் பிற வரிகளை அரசாங்கம் அதிகரிக்க வேண்டும். ஊதிய உயர்வு வழங்க முடியாது என்பது எதிர்க்கட்சிகளுக்கு நன்றாகவே தெரியும்.
ஆனால், பொய்யான வாக்குறுதிகளை அளிக்கின்றனர். தயவு செய்து இதுபோன்ற வேலைகளில் ஈடுபடாதீர்கள், நாளின் முடிவில் நீங்கள் சபிக்கப்படுவீர்கள் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |