பெண்கள்-குழந்தைகளின் பாலியல் வீடியோக்களை பகிர்ந்தால் கடூழிய சிறைத்தண்டனை
பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான சில விடயங்களை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுபவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
“பெண்களைத் தாக்குவது மற்றும் பாலியல் துன்புறுத்தல் போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. குறிப்பிடப்பட்ட நபர்கள் கடுமையான தவறு செய்துவிட்டார்கள். அவர்கள் தண்டனைக்குரிய குற்றத்தைச் செய்துள்ளனர்.
அதனால் அது தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன” என குறிப்பிட்டுள்ளார்.
நவகமவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மேல் போமிரிய பிரதேசத்தில் அமைந்துள்ள விகாரையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விளக்கமளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நிரூபிக்கப்பட வேண்டும்
பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ மேலும் தெரிவிக்கையில், “இது தொடர்பான சட்டம், தண்டனைச் சட்டத்தின் பிரிவு 365 ஏ1 இன் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
யாரேனும் இதுபோன்ற பிரசாரம் செய்தால், கடூழிய சிறைத்தண்டனை அல்லது 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளது. அத்துடன் அபராதம் விதிக்கவும் வாய்ப்பு உள்ளது.
ஆனால் அது விசாரணையில் நிரூபிக்கப்பட வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்டத்தை நடைமுறைப்படுத்துவோம்
பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான விடயங்களை, குறிப்பாக சட்டத்தால் தடைசெய்யப்பட்ட விடயங்கள் பகிரங்கப்படுத்தப்படுகின்றன.
ஒரு நபர் சமூக ஊடக வலையமைப்பின் மூலம் இவற்றை சமூகமயமாக்கும் போது, அவர் நிச்சயமாக ஒரு பெரிய தவறை செய்கிறார்.
இந்த நவகமுவ சம்பவத்திலும் அந்த நபர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.