இலங்கையில் இருந்து கருங்கற்களை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை
இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு கருங்கற்களை ஏற்றுமதி செய்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஹம்பாந்தோட்டை மாகம்புரை துறைமுகத்தை நிர்மானித்த போது அகற்றப்பட்ட கற்களை ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
ஒரு மில்லியன் தொன் எடையுடைய கருங்கற்களை ஏற்றுமதி செய்வதற்கான சாத்தியம் குறித்து ஆராய்வதற்காக குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
சுற்றாடல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இந்த அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துள்ளார்.
உள்ளுரில் கேள்வி குறைவு
உள்நாட்டில் கட்டுமானத்துறையில் கருங்கற்களுக்கான கேள்வி குறைந்த அளவில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் கருங்கற்கல் கைத்தொழிலில் ஈடுபடுவோருக்கு கடும் அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளன. வரையறுக்கப்பட்ட அடிப்படையில் கருங்கற்களை ஏற்றுமதி செய்வது குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை துறைமுக நிர்மானத்தின் போது அகற்றப்பட்ட கற்கள் துறைமுக மற்றும் மருத்துவமனை வளாகங்களில் குவிக்கப்பட்டுள்ளதாகவும் இவற்றை ஏற்றுமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் கருங்கற்களை ஏற்றுமதி செய்வது குறித்து பகிரங்க விலை மனுக்கோரல்கள் எதுவும் இதுவரையில் முன்வைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.